திடீர் பிரேக் போட்டதால் ஸ்கூட்டர் கவிழ்ந்து இலங்கை அகதி பெண் பலி: மகள் படுகாயம்
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அகதிகள் முகாமை சேர்ந்தவர் அல்லிராஜா. இவரது மனைவி சசிகலா (வயது 37).
சசிகலாவும், இவரது மகள் அபிராமி (15)யும் ஸ்கூட்டரில் பவானிசாகர் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை மகள் அபிராமி ஓட்டி செல்ல தாய் சசிகலா பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஸ்ட்டரை ஓட்டி சென்ற அபிராமி திடீரென பிரேக் போட்டார். இதில் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் நிலை குலைந்து ரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்து துடித்தனர். இதில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த சசிகலாவை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.