செய்திகள்

அம்மாபேட்டை அருகே வி‌ஷம் குடித்து வகுப்பறைக்கு வந்த 2 மாணவர்கள்: ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2016-07-20 17:41 IST   |   Update On 2016-07-20 17:41:00 IST
அம்மாபேட்டை அருகே வி‌ஷம் குடித்து வகுப்பறைக்கு வந்த 2 மாணவர்களுக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் சுந்தராம் பாளையத்தை சேர்ந்த சதீஸ்குமார் (15) ஊமாரெட்டியூர் செண்டிங் நகரை சேர்ந்த சித்தையன் (15) ஆகிய 2 மாணவர்கள் 10–ம் வகுப்பு படித்து வந்தார்கள்.

இந்த 2 மாணவர்களையும் பெற்றோர் கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது. மாணவிகளிடம் தேவையில்லாமல் பேசாமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள் என பெற்றோர் அறிவுரை கூறி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை பள்ளி வந்த இந்த 2 மாணவர்களும் வரும் போது குருணை மருந்தை (வி‌ஷம்) எடுத்து வந்தனர்.

பிறகு பள்ளி அருகே உள்ள கரும்பு காட்டுக்கு சென்று அதை குடித்து விட்டு பள்ளிக்கூடம் வந்து வகுப்பறையில் அமர்ந்தனர்.

அப்போது மாணவர்கள் 2 பேருக்கும் வியர்வை கொட்டியது. மயக்கமான நிலையில் இருந்ததை கண்டு பாடம் நடத்திய ஆசிரியை திடுக்கிட்டார்.

ஆசிரியை, “ஏம்ப்பா இப்படி வியர்க்குது உங்கள் உடம்புக்கு என்ன” என்று பதட்டத்துடன் கேட்டார். அப்போது அவர்கள் “டீச்சர் நாங்க வி‌ஷத்தை குடிச்சிட்டோம்.. ஒரு மாதிரியாக வருகிறது.” என்று கூறினர்.

உடனே சக ஆசிரியர்களுக்கு தெரிவித்து அவர்களும் ஓடி வந்தனர். உடனே இரு மாணவர்களையும பவானி ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

அதன்பிறகு 2 மாணவர்களும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களின் பெற்றோரும் உறவினர்களும் ஆஸ்பத்திரியில் கதறி அழுதபடி உள்ளனர்.

Similar News