செய்திகள்

கோபி அருகே கரும்பு தோட்டத்தில் மயிலை விரட்டிச் சென்ற சிறுத்தை: நேரில் பார்த்த தொழிலாளி ஓட்டம்

Published On 2016-07-19 16:08 IST   |   Update On 2016-07-19 16:08:00 IST
கோபி அருகே கரும்பு தோட்டத்தில் மயிலை விரட்டிச் சென்ற சிறுத்தையை நேரில் பார்த்த தொழிலாளி பயந்து ஓட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தாழகொம்பு புதூரில் கடந்த சில நாட்களுக்கு முன் வாழை தோட்டத்துக்குள் மர்ம விலங்கு ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கோபி அருகே இன்று சிறுத்தை புகுந்து உள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

கோபி அருகே உள்ள தாழகொம்பு புதூர் அடுத்த மூலத்துறை தடப்பள்ளி வாய்க்கால் அருகே சர்க்கரை கார சின்னு என்பவருக்கு சொந்தமான கரும்பு தோட்டம் உள்ளது. இந்த கரும்புத் தோட்டத்தில் இன்று 6 தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இவர்களில் தாழகொம்பு புதூரை சேர்ந்த சின்னவன் என்ற தொழிலாளியும் வேலை பார்த்தார்.

சின்னவன் கரும்பு காட்டின் மத்தியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மயிலை சிறுத்தை ஒன்று பாய்ந்து ஓடி விரட்டியதை கண்டு திடுக்கிட்டார். அவரது கண்ணை அவரால் நம்ப முடியவில்லை.

மின்னல் வேகத்தில் தன் கண் முன் சிறுத்தை பாய்ந்து சென்றதை கண்டு பயந்து தோட்டத்தை விட்டு வெளியே ஓடி வந்தார்.

இது குறித்து சக தொழிலாளர்களுக்கும் அவர் வி‌ஷயத்தை சொல்ல அவர்களும் பயந்து ஓட்டம் பிடித்தனர். இது பற்றிய தகவல் ஊருக்குள் பரவ பொதுமக்கள் அங்கு ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர். இதனால் மூலத்துறை மட்டுமல்லாமல் தாழகொம்பு புதூர், கூகலூர் மற்றும் கோபி நகரிலும் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

சிறுத்தை புகுந்ததாக கூறப்படும் பகுதி அருகே அத்தாணி வன பீட் உள்ளது. இதனால் இங்கிருந்து சிறுத்தை தவறி வந்து கரும்பு தோட்டத்துக்குள் புகுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சிறுத்தையை நேரில் பார்த்ததாக கூறப்படும் சின்னவன், “நான் பார்த்த விலங்கு சிறுத்தை தோற்றத்தில் உயரமாகவும் அகலம் அதிகமாக கொண்டதாகவும் இருந்தது” என்று கூறினார்.

அப்பகுதியை சேர்ந்த மேலும் சிலர் கூறும்போது, “இப்பகுதியில் சிறுத்தை புகுந்திருப்பது வாய்ப்பில்லை வனத்தில் வாழும் செந்நாய் எதுவும் வந்திருக்க கூடும் எனினும் வனத்துறைக்கு தகவல் கூறி விசாரிக்க சொல்ல வேண்டும்” என்று கூறினர்.

இது பற்றிய தகவல் அத்தாணி வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அத்தாணி ரேஞ்சர் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து உள்ளனர்.

கரும்பு காட்டில் புகுந்த விலங்கு சிறுத்தையா? அல்லது செந்நாயா? என்பது குறித்து அதன் கால் தடத்தை வைத்து பார்க்க முடிவு செய்துள்ளனர்.

Similar News