செய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைவர் 2 நாட்களில் அறிவிப்பு: நாராயணசாமி பேட்டி

Published On 2016-07-19 12:49 IST   |   Update On 2016-07-19 12:49:00 IST
தமிழக காங்கிரஸ் தலைவர் யார் என்று இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என நாராயணசாமி பேட்டியில் கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி இன்று காலை டெல்லி செல்ல சென்னை விமானநிலையம் வந்தார். அவ்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக காங்கிரஸ் தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

வெகு விரைவில் தகுதியான ஒருவரை தலைவராக நியமிப்பார்கள். அதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.

காஷ்மீர் பிரச்சினை தற்போது முன்பை விட அதிக அளவு இருக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினை அப்போதைய மத்திய அரசின் நடவடிக்கையால் கட்டுக்குள் இருந்தது.

தற்போது காஷ்மீரில் தினம்தினம் வன்முறை சம்பவங்கள், குண்டு வெடிப்பு, பயங்கரவாத தாக்குதல், உயிரிழப்பு சம்பவம் அதிகரித்து இருக்கிறது. இதற்கு காரணம் பா.ஜனதா அரசுதான். பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் பிரச்சினையில் இரட்டை நிலைப்பாட்டை மேற்கொண்டு வருகிறார்.

ஒரு பக்கம் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். மற்றொரு பக்கம் தீவிரவாதத்தை அடக்குவேன் என்று பேசி வருகிறார். காஷ்மீர் பிரச்சினையில் உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை. எனவே தான் பயங்கரவாத தாக்குதல், குண்டுவெடிப்புகள் வன்முறைகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News