செய்திகள்

கொடுமுடியில் 2–வது திருமணம் செய்த பெண் தீக்குளித்து பலி

Published On 2016-07-14 16:51 IST   |   Update On 2016-07-14 16:51:00 IST
கொடுமுடியில் முதல் கணவர் இறந்ததை மறக்க முடியாமல் 2–வது திருமணம் செய்த பெண் தீக்குளித்து இறந்தார்.

ஈரோடு:

கொடுமுடி சுல்தான் பேட்டையை சேர்ந்தவர் ரிஸ்வானா (வயது 28). இவரது முதல் கணவர் அப்துல் உசேன் கடந்த 8 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.

முதல் கணவர் இறந்து பல ஆண்டாகியும் ரிஸ்வானா அவரது ஞாபகமாகவே இருந்தார். அவரை மறக்க முடியாமல் இருந்தார்.

இந்த நிலையில் 3 ஆண்டுக்கு முன் அவரது பெற்றோர் அவருக்கு பர்கத்அலி என்பவரை 2–வது திருமணம் செய்து வைத்தனர். 2–வது திருமணம் செய்த பிறகும் அவர் முதல் கணவரை மறக்க முடியாமல் இருந்தார்.

இந்த நிலையில் மன வேதனையில் காணப்பட்ட ரிஸ்வானா தன் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.

உடல் முழுவதும் எரிந்த நிலையில் அலறி துடித்த அவரை மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு ஈரோடு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அதன் பிறகு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரிஸ்வானா பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News