செய்திகள்

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும்: ராமதாஸ் பேட்டி

Published On 2016-07-13 14:31 IST   |   Update On 2016-07-13 14:31:00 IST
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பண்ருட்டியில் ராமதாஸ் பேசியுள்ளார்.
பண்ருட்டி:

தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று பண்ருட்டி கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்ததாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் நடந்து 5 வருடங்கள் கழித்து சம்மன் வந்தபிறகு தான் என்மீது வழக்குப்பதிவு செய்தது தெரியும். அதனால் சட்டத்தை மதித்து இன்று நான் கோர்ட்டில் ஆஜரானேன்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11 கொலைகள் நடந்துள்ளது. இதற்கு காவல் துறையை குற்றம் சாட்டுவதை விட ஆட்சியில் இருப்பவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் காவல்துறையை செயல்பட விடாமல் வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 1 லட்சத்து 70 ஆயிரம் போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 1 லட்சத்து 21 ஆயிரம் போலீசாரே பணியில் உள்ளனர்.

20 ஆயிரம் போலீசாரை தேர்வு செய்து பணி அமர்த்தாமல் உள்ளனர். அவர்களை உடனே பணி அமர்த்த வேண்டும். காவல் துறையில் உயர் பதவியில் இருப்பவர்கள் திறமையற்றவர்களாக உள்ளனர்.

அவர்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பாக செயல்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.

முல்லை பெரியாறு பிரச்சனைக்கு முதல்வர் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார். ஆனால் இன்னமும் இந்த பிரச்சனை முடியவில்லை.

மேற்கண்டவாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

Similar News