செய்திகள்

பெருங்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகை-பணம் திருட்டு

Published On 2016-07-04 02:48 IST   |   Update On 2016-07-04 02:48:00 IST
பெருங்குடியில் தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் 25 பவுன் தங்க நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த பெருங்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்(வயது 36). இவரும், இவருடைய மனைவியும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு சாவியை அருகில் உள்ள ஒரு மறைவான இடத்தில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டனர்.

பின்னர் கமலக்கண்ணன் திரும்பி வந்து பார்த்தபோது, சாவி வைக்கப்பட்ட இடத்தில் இருந்து சற்று தள்ளி இருந்ததை கண்டார்.

வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் சோதனை செய்த போது அதில் வைத்து இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் திருட்டு போய் இருப்பது தெரிந்தது. கமலக்கண்ணன், வீட்டை பூட்டி விட்டு சாவியை மறைவான இடத்தில் வைத்து விட்டு செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அந்த சாவியை எடுத்து வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்று உள்ளனர்.

இதுபற்றி துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Similar News