செய்திகள்

நெய்வேலியில் வாக்கிங் சென்ற என்.எல்.சி. தொழிலாளி அடித்து கொலை: வாலிபர் வெறிச்செயல்

Published On 2016-06-27 15:52 IST   |   Update On 2016-06-27 15:52:00 IST
நெய்வேலியில் இன்று வாக்கிங் சென்ற என்.எல்.சி. தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

நெய்வேலி:

நெய்வேலி புதுநகர் 2–வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் அண்ணாமலை (வயது 47). இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு பணிக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு திரும்பினார்.

பின்னர் அவர் தான் வளர்த்து வந்த நாயுடன் 2–வது வட்டத்தில் காலை வாக்கிங் சென்றார். அப்போது அந்த பகுதியில் 2 பேர் ஒருவருக்கொருவர் திட்டி தகராறு செய்து கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த அண்ணாமலை அவர்களை கண்டித்தார். ஏன் ரோட்டில் நின்று தகராறு செய்கிறீர்கள் என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரில் ஒரு வாலிபர் அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து அண்ணாமலையை ஓங்கி அடித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

இதைப்பார்த்ததும் அங்கு தகராறு செய்த 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அண்ணாமலையை மீட்டு என்.எல்.சி. ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அண்ணாமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் அண்ணாமலை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு கூடிநின்று கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி. கலைச்செல்வன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

என்.எல்.சி. தொழிலாளியை அடித்து கொன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட அண்ணாமலைக்கு உமா பார்வதி என்ற மனைவியும், வினோத் என்ற மகனும், சுரேந்திரா என்ற மகளும் உள்ளனர்.

என்.எல்.சி. பகுதியில் இன்று காலை நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.

Similar News