செய்திகள்

ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்: திருமாவளவன் பேட்டி

Published On 2016-06-26 16:29 IST   |   Update On 2016-06-26 16:29:00 IST
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.

கடலூர்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடலூர் நெல்லிக்குப்பத்தில் உள்ள இஸ்லாமிய சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எதிர்வரும் மாநகராட்சி மேயர் தேர்தலில் நடைமுறையை மாற்றி, மாமன்ற உறுப்பினர்கள், மேயரை தேர்ந்தெடுக்கும் சட்ட திருத்தத்தை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.

இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். சென்னை மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதற்காக இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது ஆளுங்கட்சியும், அரசும் செயல் இழந்தது. இதனால் தான் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க.வுக்கு சென்னையில் பல இடங்களில் தோல்வி ஏற்பட்டது. இந்த சூழலில் அ.தி.மு.க. நேரடி தேர்தல் வைத்தால் தோற்கும் என்பதால் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறையை மாற்றியுள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியை தலித் தொகுதியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக நான் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். அது விசாரணையில் உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, ஊராட்சிகளில் துணைத்தலைவர் பதவிக்கு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாங்கள் 4 கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணியாக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளோம். அதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க இருக்கிறது. தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு மூத்த தலைவர். அவரை சாதாரண சட்டசபை உறுப்பினர் போல் கொச்சைப்படுத்துவது சரியல்ல. அவரது பாதுகாப்பு முடிவை ரத்து செய்தது நாகரீகமான செயல் அல்ல.

தி.மு.க. தலைவருக்கு உரிய மரியாதையையும், மதிப்பையும் தமிழக அரசு தர வேண்டும். அவரை அவமதிக்கும் போக்கை கைவிட வேண்டும். கச்சத்தீவு பற்றி தி.மு.க., அ.தி.மு.க. சட்டமன்றத்தில் மாறிமாறி பழிசுமத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், கச்சத்தீவின் வரலாற்று உண்மையை வெளிப்படுத்தவில்லை. கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரஸ் தான் என்ற உண்மையை யாரும் சொல்லவில்லை. கச்சத்தீவை மீட்க மத்திய அரசை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் வற்புறுத்த வேண்டும்.

கச்சத்தீவை மீட்காத வரை மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. 20 ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய தோழர்களை விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார்.

Similar News