செய்திகள்

கொதிக்கும் ஆயில் கொட்டி 2 தொழிலாளிகள் பலி: உறவினர்கள் திடீர் மறியல்

Published On 2016-06-25 17:46 IST   |   Update On 2016-06-25 17:46:00 IST
கொதிக்கும் ஆயில் கொட்டி 2 தொழிலாளிகள் பலியானர்கள். உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு:

ஈரோடு நாராயண வலசில் உள்ள ஒரு ஆயில் மில்லில் கொதிகலனில் உள்ள கொதிக்கும் நீர் கொட்டி ஈஸ்வரமூர்த்தி மற்றும் ரவி ஆகிய 2 தொழிலாளர்களின் உடல் வெந்தது.

இதில் 2 பேருமே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பலியான அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த ரவியின் உறவினர்கள் 50 பேர் இன்று ஈரோடு- பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி முன் குவிந்தனர்.

‘‘இந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது தான் கூடுதல் பணம் கேட்டனர். இதனால் தான் ரவியை கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தோம்’’ என்று கூறி ஆஸ்பத்திரி முன் பெருந்துறை ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த பகுதியின் இருபுறமும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

சம்பவ இடத்துக்கு டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு சம்பத், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், ஈஸ்வரன் மற்றும் போக்குவரத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கொடிசெல்வன், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

அவர்கள் மறியல் நடத்தியவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ‘‘ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் நடத்தக்கூடாது’’ என எச்சரித்தனர். பேச்சு வார்த்தைக்கு பிறகு மறியல் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். சுமார் 45 நிமிடத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

Similar News