செய்திகள்

புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர் இன்று சிறைப்பிடிப்பு - இலங்கை கடற்படை நடவடிக்கை

Published On 2016-06-16 11:33 IST   |   Update On 2016-06-16 11:33:00 IST
நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.
அறந்தாங்கி :

நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 297 விசைப்படகுகளிலும், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 203 விசைப்படகுகளிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

அவர்களில் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் பாக்கியம் (வயது 45) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அப்பாஸ்கான் மகன் மைதீன்கான் (45), மைக்கேல் மகன் ஜோசப்அருள் (50), உலகநாதன் மகன் பாக்கியம் (45) ஆகிய 3 மீனவர்கள் நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். நீங்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கிறீர்கள் என்று கூறி அந்த படகில் இருந்த 3 மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். மேலும் அவர்களது விசைப்படகையும் சிறைப் பிடித்து காங்கேசன் துறை முகத்திற்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அங்கு அவர்களை விசாரணை செய்து, மேல் நடவடிக்கைக்காக இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஏற்கனவே கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களும், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 21 விசைப்படகுகளும் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 மீனவர்களும், ஒரு விசைப்படகும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற ராமேசுவரம், கோட்டைப்பட்டினம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் குறி வைத்து தொடர்ந்து சிறை பிடித்து வருகின்றனர். இதனால் மீனவர்கள் கடலுக்கு அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் மீனவர் சங்கத் தலைவர் சின்னஅடைக்கலம் கூறியதாவது:–

தடைக்காலத்தில் ஒவ்வொரு விசைப்படகு உரிமையாளரும் பல லட்ச ரூபாய் செலவு செய்து விசைப் படகுகளை பழுது நீக்கம் செய்துள்ளனர். இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடித்து அங்குள்ள கடற்பகுதியில் பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்படுவதால், அந்த படகுகள் முற்றிலும் சேதம் அடைகின்றன.

எனவே மத்திய மாநில அரசுகள் உடனே தலையிட்டு, இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இலங்கை சிறை பிடித்து வைத்துள்ள அனைத்து விசைப்படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை டெல்லி சென்ற முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைப்பிடிக்கப்படும் சம்பவத்தை தடுக்க வேண்டும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் கடலுக்கு சென்ற கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப் பட்ட சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News