செய்திகள்

இலுப்பூர் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு

Published On 2016-06-13 22:51 IST   |   Update On 2016-06-13 22:51:00 IST
இலுப்பூர் பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இலுப்பூர்:

இலுப்பூர் அருகே உள்ள போலம்பட்டியை சேர்ந்த கோகுல் என்பவர் ஒரு டிராக்டரில் நேற்று முன்தினம் மாலையில் சத்தியமங்கலம் பகுதியில் இருந்து குப்பைகளை ஏற்றி கொண்டு சாத்தம்பட்டி வழியாக குரும்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது டிராக்டரில் குரும்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பாண்டி (வயது 17). என்பவர் அதில் பயணம் செய்து வந்தார்.

இந்நிலையில் டிராக்டர் இலுப்பூர் அருகே உள்ள சாத்தம்பட்டி பிரிவு சாலை அருகில் வரும்போது டிராக்டரில் இருந்து பாண்டி தவறி கீழே விழுந்ததார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாண்டி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து இலுப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்மொழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அன்னவாசல் அருகே உள்ள ராசாம்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது 57). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் தனது மொபட்டில் இலுப்பூர் சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் இலுப்பூர் அருகே உள்ள சென்னப்பநாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகில் வந்தபோது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ராமன் ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார்.

இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அங்கு சிகிச்சை பலன்றி ராமன் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News