கே.சி.பழனிச்சாமி பணம் தேர்தலுக்கு பயன்படுத்தப்படவில்லை: டி.கே.எஸ்.இளங்கோவன் விளக்கம்
சென்னை:
அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்க கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்ததால் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான அன்பு நாதன் வீட்டு குடோனில் நடத்திய சோதனையில் ரூ. 4 கோடியே 77 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர வேட்டி– சேலைகளும் அங்கு பிடிபட்டது.
இதேபோல் இந்த தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியின் வீடு, அவரது மகன் வீடுகளில் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 98 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால் இந்த தொகுதி தேர்தலை 23–ந்தேதிக்கு தள்ளி வைத்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
தொழில் அதிபரான கே.சி.பழனிச்சாமியிடம் பணப்புழக்கம் இருப்பது சாதாரணம். ஆனால் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட வில்லை.
அரவக்குறிச்சி தொகுதி தேர்தலை 23–ந்தேதிக்கு தள்ளி வைத்திருப்பது தேர்தல் ஆணையத்தின் முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.