செய்திகள்

நாகை மாவட்டத்தில் தேர்தல் பணி: மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயிற்சி

Published On 2016-04-17 19:51 IST   |   Update On 2016-04-17 19:51:00 IST
நாகை மாவட்டத்தில் தேர்தல் பணி குறித்து மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்,ஏப்.17–

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது மாவட்ட கலெக்டர் பழனிசாமி பேசுகையில் கூறியதாவது;

தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்களுக்கான 2–ம் கட்ட பயிற்சி நடைபெற்றுள்ளது. தற்போது 140 மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவு அலுவலர் தேர்தலுக்கு முன் வாக்குப்பதிவு இயந்திரத்தினை கையாளும் முறை, மாதிரி வாக்குப்பதிவு நடத்தும் முறை மற்றும் வாக்குப்பதிவின் போது செய்யப்பட வேண்டியவை போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பிரச்சனைகள் ஏற்படும் போது, செய்யப்படவேண்டிய பணிகள், போன்ற சந்தேகங்களுக்கு விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி அளிக்கப்பட்ட மண்டல அலுவலர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இப்பயிற்சியினை அளிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்பயிற்சியில் உதவி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான முத்துமாரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தெய்வநாயகி, கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (ம) வாக்குப்பதிவு இயந்திர பொறுப்பு அலுவலர் ராமன், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News