ஊதிய உயர்வு கேட்டு அனகாபுத்தூர் நகராட்சியில் தொழிலாளர்கள் போராட்டம்
தாம்பரம்:
பல்லாவரம் அனகாபுத்தூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் 120 பேர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு 5,800 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. தற்போது புதிய ஒப்பந்ததாரர்கள் ரூ.5300 ஊதியமாக கொடுத்தார்கள்.
துப்புரவு தொழிலாளர்கள் எங்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தரவேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த 120 துப்புரவு தொழிலாளர்கள் இன்று காலை பணிகளை புறக்கணித்து விட்டு அனகாபுத்தூர் நகராட்சியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து துப்புரவு தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு பணியில் சங்கர்நகர் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.