உள்ளூர் செய்திகள்

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கொடிவேரி தடுப்பணையில் 17 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்

Published On 2023-05-01 12:57 IST   |   Update On 2023-05-01 12:57:00 IST
  • ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
  • மே தின விடுமுறை என்பதால் கூட்டம் காலையில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது.

கோபி:

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பகல் நேரங்களில் அனல்காற்று வீசி வருவதால் பொதுமக்கள் கடுமையாக அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக நீர்நிலைகள் மற்றும் குளுகுளு பிரதேசங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி தடுப்பணையில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

சுற்றுலா பயணிகள் கார், பஸ், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொடிவேரிக்கு வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக கொடிவேரி பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் சுமார் 17 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளித்து மகிழ்ந்தனர்.

அருவியில் கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்துச் சென்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் நுழைவு கட்டணமாக ரூ.85 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 12 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இதன் காரணமாக கடுமையான கூட்டம் அலைமோதியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று மே தின விடுமுறை என்பதால் கூட்டம் காலையில் இருந்தே அதிகரிக்க தொடங்கியது. அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுடச்சுட மீன்களையும் வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.

பொதுமக்களுக்கு காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டே இருந்தது.

Tags:    

Similar News