உள்ளூர் செய்திகள்

நெல்லையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 135 பஸ்கள் இயக்கம்

Published On 2022-10-25 08:15 GMT   |   Update On 2022-10-25 08:15 GMT
  • தீபாவளி நிறைவடைந்ததையொட்டி பயணிகள் வசதிக்காக நெல்லையில் இருந்து கூடுதல் பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.
  • பயணிகள் சிரமமின்றி செல்வதற்காக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நெல்லை:

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருந்தே சென்னை, பெங்களுரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊரான நெல்லைக்கு வந்தனர்.

ரெயில், பஸ்கள் மூலமாக நெல்லைக்கு வந்த அவர்கள் அனைவரும் இன்று மாலை முதல் மீண்டும் தங்கள் பணிபுரியும் ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனையொட்டி நெல்லையில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பயணிகள் எவ்வித சிரமும் இன்றி செல்வதற்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர கூடுதலாக பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து இன்று மதியத்திற்கு பிறகு சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பெங்களுரு, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கும் இரவில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இதற்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 80 முதல் 100 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. ஆனாலும் தொடர்ந்து பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கேற்ப பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து இயக்கவும் பணிமனையில் பஸ்கள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பிலும் சென்னை, பெங்களுரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக 27 முதல் 35 பஸ்கள் வரை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியத்திற்கு பிறகு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படும் என்பதால் திருட்டு, செயின்பறிப்பு உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக போலீசார் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News