உள்ளூர் செய்திகள்

1000 ஆடுகளை கூட்டாளிகளோடு சேர்ந்து சொகுசு காரில் திருடிய பெண்

Published On 2023-01-12 16:13 IST   |   Update On 2023-01-12 16:13:00 IST
  • கைவரிசை காட்டிய அதே இடத்தில் மீண்டும் ஆடுகளை திருட வந்ததால் போலீசாரின் பொறியில் சிக்கிக் கொண்டனர்.
  • கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

தாம்பரம்:

சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆடுகள் தொடர்ந்து திருடு போனது.

இந்நிலையில் சொகுசு காரில் வந்து ஆடு திருடிய பெண் உள்பட 3 பேர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பம்மல் ஆதாம் நகரை சேர்ந்தவர் சின்னப்பொன்னன். இவரது வீட்டில் இருந்த 15 ஆடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருடு போனது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பார்த்த போது சிவப்பு நிற காரில் வரும் பெண் உள்பட 3 பேர் கும்பல் ஆடுகளுக்கு முதலில் பொரியை சாப்பிட வைத்து பின்னர் அதனை நைசாக பிடித்து செல்வது பதிவாகி இருந்தது.

இது குறித்து சங்கர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே கடந்த வாரம் அதே கும்பல் மீண்டும் சின்னப் பொன்னன் வீட்டுக்கு வந்து மீதி இருந்த 5 ஆடுகளையும் திருட முயன்றனர். சத்தம் கேட்டு சின்னப்பொன்னன் எழுந்து வந்ததும் ஆடு திருடும் கும்பல் காரில் தப்பி சென்றுவிட்டனர்.

இதனால் மதுரவாயல் பகுதியில் உள்ள கறிக்கடைகளில் விசாரித்த போது திருட்டு ஆடுகளை அந்த கும்பல் ஒரு கறிக்கடையில் விற்று வந்தது தெரிந்தது.

இதையடுத்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்களது கார் மதுரவாயல் புறவழிச்சாலையில் போரூர் சுங்கச்சாவடியை கடந்து செல்வது பதிவாகி இருந்தது.

இதையடுத்து சொகுசு காரில் வந்து ஆடு திருட்டில் ஈடுபட்ட முடிச்சூரை சேர்ந்த சரோஜினி, கூட்டாளிகளான அனகாபுத்துரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார், பொரிக்கடை உரிமையாளர் பாரூக் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

3 பேரும் கூட்டு சேர்ந்து முதலில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஆடுகளை திருடி விற்று வந்து உள்ளன. லட்சக்கணக்கில் பணம் குவிந்ததால் பின்னர் சொகுசு கார் வாங்கி கைவரிசை காட்டி உள்ளனர்.

கைவரிசை காட்டிய அதே இடத்தில் மீண்டும் ஆடுகளை திருட வந்ததால் போலீசாரின் பொறியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கைதானவர்கள் போலீசாரிடம் கூறும்போது, ஆடுகளை திருடினால் அந்த புகாரின் மீது போலீசார் கவனம் செலுத்தி தேடமாட்டார்கள். மேலும் இந்த திருட்டு குறித்து பெரும்பாலானோர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்யமாட்டார்கள் என்பதால் கைவரிசை காட்டி விற்றதாக தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News