கோவைப்புதூரில் 10 லாரிகள் சிறைபிடிப்பு
- உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கேரளாவிற்கு ஜல்லிக்கற்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
கோவை:
கோவை, குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூர் - மைல்கல் அருகே 6 குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கிருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் கேரளாவிற்கு ஜல்லிக்கற்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.இதில் மைல்கல் பகுதியில் இருந்து கோவைப்புதூர் செல்ல தொட்டிராயன் கோவில் வீதி வழியாக லாரிகள் இயக்கப்படுகிறது.
இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் 10 லாரி களை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.தகலறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
இந்த பகுதியில் 30 வீடுகள், அடுக்குமாடி குடியிரு ப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதியில் அதிக பாரத்துடன் லாரிகள் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுவரை 5 பேர் விபத்தில் சிக்கி உள்ளனர்.
இந்தநிலையில் ஒருவர் தனது காலை இழந்துள்ளார். மேலும் அதிக பாரத்துடன் லாரிகள் இயக்கப்படுவதால் தண்ணீர் குழாய்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுகின்றன. எனவே குடியிருப்பு வழியாக லாரிகள் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து அந்த சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.