செய்திகள்
சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலர் பத்திரிக்கைக்கு நன்றி தெரிவித்து டுவிட் செய்த ராகவா லாரன்ஸ்

சிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலருக்கு ராகவா லாரன்ஸ் நன்றி

Published On 2019-07-16 12:50 GMT   |   Update On 2019-07-16 13:21 GMT
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவன் தொடர்பான செய்தியை, கவனத்திற்கு கொண்டுவந்த மாலை மலருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை:

ராஜபாளையத்தை சேர்ந்தவர் குருலட்சுமி. இவரது மகன் குருசூரியா. வினோதமான நோய் தாக்கப்பட்டதால் குருசூரியா படுத்த படுக்கையாகி விட்டான். இந்த நிலையில் குருலட்சுமியின் கணவரும் பிரிந்து சென்றுவிட்டார். குருலட்சுமியின் தம்பி வெங்கடேசன் தனது அக்கா மற்றும் அக்காவின் மகனுக்காக திருமண வாழ்வை தியாகம் செய்து அவர்களை காப்பாற்ற போராடி வருகிறார்.

மிகவும் ஏழ்மையினால் அவர்களால் குருசூரியாவுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்த நிலையில் சென்னை சென்று நடிகர் ராகவா லாரன்சை சந்தித்தால் தேவையான மருத்துவ உதவிகிடைக்கும் என்று சொன்னதை கேட்டு 3 பேரும் சென்னை புறப்பட்டு வந்தனர். ஆனால் அவர்களால் ராகவா லாரன்ஸ் முகவரியை கண்டு பிடித்து அவரை சந்திக்க முடியவிலலை.

இதனால் எதுவும் புரியாமல் தவித்த அவர்கள் 3 பேரும் எழும்பூர் ரெயில் நிலைய பிளாட்பாரத்திலேயே கடந்த சிலதினங்களாக தங்கி இருந்தனர். இதுபற்றி தகவல் நேற்றைய மாலை மலரில் படத்துடன் வெளியானது. அதை பார்த்ததும் ராகவா லாரன்ஸ் உடனடியாக அவர்களுக்கு உதவ முன் வந்தார்.



படவேலைகளில் மும்முரமாக இருந்தும் இன்று காலையில் முதல் வேலையாக தனது உதவியாளரை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு காரில் அனுப்பி குருலட்சுமியும், வெங்கடேசனையும் ராகவா லாரன்ஸ் அழைத்துவர கூறினார். அதைகேட்டதும் அவர்கள் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் வடித்தனர். பின்னர் 3 பேரையும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராகவா லாரன்ஸ் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

அச்சிறுவனின் மருத்துவ செலவுகளை ஏற்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார். 3 பேரும் என்னை நம்பி வந்து கஷ்டப்பட்டதை மாலை மலரில் பார்த்ததும் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அந்த சிறுவனுக்கு என்ன மாதிரியான உதவிகள் தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப உதவி செய்யப்படும். எங்களால் முடியாத அளவுக்கு இருந்தால் அரசை அணுகுவோம். என ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்த செய்தியை எனது கவனத்திற்கு கொண்டுவந்த மாலை மலர் நாளிதல் மற்றும் இணையத்தளத்துக்கு  எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News