செய்திகள்

‘சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை’ - உலக அழகி மனுஷி சில்லர் பேட்டி

Published On 2017-11-29 01:17 IST   |   Update On 2017-11-29 01:17:00 IST
“சினிமாவில் நடிக்கும் எண்ணம் தற்போது இல்லை” என்று உலக அழகி மனுஷி சில்லர் கூறினார்.
புதுடெல்லி:

“சினிமாவில் நடிக்கும் எண்ணம் தற்போது இல்லை” என்று உலக அழகி மனுஷி சில்லர் கூறினார்.

உலக அழகி பட்டத்தை வென்ற மனுஷி சில்லர் நேற்று டெல்லி சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொதுவாக உலக அழகி பட்டத்தை வென்றவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையும், வாய்ப்பும் அதிக அளவில் இருக்கும். ஆனால் எனக்கு அது போன்ற எண்ணம் தற்போது எதுவும் கிடையாது. அதனால் அதுபற்றி எதுவும் கருத்து கூற இயலாது.

எனினும் எதிர்காலத்தில் நடிகர் அமீர்கானுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். ஒவ்வொரு படத்திலும் அவர் உணர்வுபூர்வமாகவும், சவாலாகவும் நடித்து வருகிறார். அவருடைய படங்கள் அனைத்தும் மக்களுக்கு நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. எனக்கு மிகவும் பிடித்த நடிகை பிரியங்கா சோப்ரா.

என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் டாக்டர்கள். நானும் டாக்டருக்கு படித்து வருகிறேன். அந்த வகையில் அடுத்த ஆண்டு 4 கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு செல்ல இருக்கிறேன். அங்கு பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளேன்.

சர்ச்சையில் சிக்கி இருக்கும் ‘பத்மாவதி’ படத்தை பற்றியும், அதில் நடித்த நடிகை தீபிகா படுகோனேவுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதை பற்றியும் கேட்கிறீர்கள். இந்தியாவில் இருக்கும் பெண்கள் அனைவரும் பொதுவானவர்கள். நம் நாட்டில் பெண்களுக்கு என்று குறிப்பிட்ட வரம்புகளை நிர்ணயித்து இருக்கின்றனர். எனவே பெண்கள் நலம் சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News