ஐ.பி.எல்.(IPL)
சீர்காழி தொகுதி

சீர்காழி தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-20 12:22 IST   |   Update On 2021-03-20 12:22:00 IST
அதிமுக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்று எம்எல்ஏ-வாக இருக்கும் பி.வி. பாரதி, திமுக சார்பில் மு. பன்னீர்செல்வம் நிறுத்தப்பட்டுள்ளனர்.
சொத்து மதிப்பு

பி.வி. பாரதி

1. கையிருப்பு- ரூ. 1,00,000
2. அசையும் சொத்து- ரூ. 61,62,931
3. அசையா சொத்து- ரூ. 84,82,215

மு. பன்னீர்செல்வம்

1. கையிருப்பு- ரூ. 20,000
2. அசையும் சொத்து- ரூ. 27,02,000
3. அசையா சொத்து- ரூ. 30,00,000

தேவார பாடல்களை அருளிய உமையம்மையிடம் ஞானப்பால் உண்ட திருஞானசம்பந்தர் அவதரித்த ஊர். உலகளவில் தமிழிசை வளர்த்த மூவர்களான முத்துதாண்டவர், அருணாச்சலகவிராயர், மாரிமுத்தாபிள்ளை பிறந்த ஊராகும். உலக நூலக தந்தை என போற்றபடும் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த ஊர். வெண்கலகுரலுக்கு சொந்தமான திரையிசை பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பிறந்த ஊர்.

அதோடு நவகிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலம் வைத்தீஸ்வரன்கோயில், புதன் ஸ்தலம் திருவெண்காடு மற்றும் 108 திவ்யதேசங்களில் 11 திவ்யதேசங்கள் கொண்ட திருநாங்கூர் உட்பட பல சைவ,வைணவ கோயில்களை கொண்ட சிறப்பு பெற்ற தொகுதியாகும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி சட்டமன்றத் தொகுதி (தனி) உள்ளடக்கியதாகும். சீர்காழி நகராட்சியாகவும், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியாகவும், சீர்காழி, கொள்ளிடம் என 2 ஒன்றியங்கள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் பகுதி சீர்காழி தொகுதியில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு வடிகாலாக திகழும் கொள்ளிடம் ஆறு சீர்காழி அருகே பழையாரில் கடலில் கலக்கிறது.

இப்பகுதியில் விவசாயம் மற்றும் மீன்பிடி பிரதான தொழிலாக உள்ளது. அதோடு தைக்கால், சேந்தங்குடி, புத்தூர் ஆகிய பகுதிகளில் பாய் மற்றும் பிரம்பு கைவினைப்பொருட்கள் தயாரிக்கும் தொழிலும் பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.

சீர்காழி வட்டத்தில் கொடியம்பாளையம் தீவு கிராமம் முதல் வானகிரி வரை 18 மீனவ கிராமங்களில் 80 ஆயிரம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 40 ஆயிரம் மீனவர்கள் நேரடி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை நம்பி மறைமுக மீன்பிடித் தொழிலில் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் 30 ஆயிரம் பேர் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் 6000 பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் உள்ளன. கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் தோட்டபயிரான சாமந்தி பூ, செங்கரும்பு, மணிலா, வாழை, காய்கறி பயிர்களை விவசாயிகள் பயிர் இடுகின்றனர்.

சீர்காழி தொகுதியில் ஆதிதிராவிடர்கள் பெரும்பாண்மையாக உள்ளனர். அதற்கு அடுத்த வன்னியர்கள் உள்ளனர். முக்குலத்தோர், மீனவர்கள்,நாடார், செட்டியார், பிள்ளைமார்கள், முதலியார்கள், யாதவர்கள் என அனைத்து சமூகத்தினரும் உள்ளனர். இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் வாக்குகளும் ஆங்காங்கே உள்ளது.

கடந்த 1952 முதல் தற்பொழுது வரை தனி தொகுதியாகவே சீர்காழி தொகுதி உள்ளது. சீர்காழி சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை தேதி 1.1.21 அன்று ஆண்கள் 1,20,329, பெண்கள் 1,23,310 மூன்றாம் பாலினத்தவர் 12 பேர். மொத்தம் 2,43,651 வாக்காளர்களை உள்ளடக்கியது ஆகும்.

சீர்காழி நகர் பகுதியில் சாக்கடை கழிவுநீர் சென்று சேர வழியில்லாமல் நகரில் ஆங்காங்கே தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய்தொற்றுகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பாதாள சாக்கடை திட்டம் கடந்த தேர்தல் வாக்குறுதியிலேயே சொல்லப்பட்டும் அவை நிறைவேற்றப்படவில்லை.


அதிமுக வேட்பாளர் பி.வி. பாரதி, திமுக வேட்பாளர் பன்னீர் செல்வம்

சீர்காழி நகரில் ஏழை, எளிய மாணவ- மாணவிகள் கல்வி பயில நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்தப்படவில்லை. நூலக தந்தை பிறந்த ஊரில் உள்ள நூலகத்திற்கு சொந்த கட்டிடம் இல்லை. மாவட்ட அரசு இசைப்பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு அவை முடிக்கப்பட வேண்டும்.

வைத்தீஸ்வரன் கோயிலில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழிப்பாதை சாலைக்கு புதிய வழிதடம் ஏற்படுத்தவேண்டும். திருவாலி ஏரியை புனரமைத்து, நீர்பிடிப்பு காலங்களில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரிக்கு நடவடிக்கை எடுப்பது.

கொள்ளிடத்தில் தீயணைப்பு நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவை ஏற்படுத்திட வேண்டும். பழையார், திருமுல்லைவாசல் மீனவர்களின் நீண்டநாள் பிரச்சனை முகத்துவாரத்தை தூர்வார வேண்டும்.மீனவ சமுதாய மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும், கடலோர கிராமங்கள் அனைத்திற்கும் கடைகோடி வரை குடிநீர் தட்டுபாடு இல்லாமல் போக்க கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தினை முழுமையாக விரிவுப்படுத்திடவேண்டும். 

கடல்நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியே 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு உட்புகுந்து 100-க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடி பகுதியில் கதவணை கட்ட வேண்டும். உப்பனாற்றின் வழியே கடல் நீர் உட்புகுவதை தடுக்க கதவணை திட்டங்களை உடனடியாக துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் மிக முக்கிய கோரிக்கையாக சுதந்திரமடைந்து 70 வருடம் கடந்தும் தொகுதி மறுவரையறை செய்யாமல் தனி தொகுதியாக உள்ளது. பொது தொகுதியாக மாற்ற வேண்டும்.

2016 தேர்தல் வெற்றி

பி.வி. பாரதி (அ.தி.மு.க)- 76,487
எஸ். கிள்ளைரவீந்தரன் (தி.மு.க)- 67,484
முத்துகுமார்.பொன் (பா.ம.க)- 14,890
உமாநாத் (தே.மு.தி.க)- 12,060
ஜோதி (நாம் தமிழர்)- 1,430
இளவழகன் (பா.ஜ.க)- 1,187
கலைவாணி (சிவசேனா)- 822

Similar News