செய்திகள்
இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசிய போது எடுத்த படம்.

தாமிரபரணி-நம்பியாறு இணைப்பு திட்டம் 2022-ல் முடிக்கப்படும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2021-02-23 07:55 GMT   |   Update On 2021-02-23 07:55 GMT
தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகள், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை  தாக்கல் செய்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

ஆவின் நிறுவனம் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 36.79 லட்சம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து வருகிறது. ஆவின் வரலாற்றிலேயே, 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 19-ந் தேதியன்று, அதிகபட்சமான அளவாக, நாளொன்றுக்கு 40.63 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆவின் மற்றும் மாவட்ட ஒன்றியங்களால் நாளொன்றுக்கு சராசரியாக 24.49 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது.

மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கும் தளங்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு பணிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு கணிசமான அளவில் மேம்படுத்தப்பட்டது. 2011-12ம் ஆண்டு முதல் இத்தகைய மூலதன பணிகளுக்காக, மொத்தம் 1,731.82 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 43 புதிய மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்கும் தளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்வதற்காக, 1,374.64 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மீன்வளத்துறைக்கான மூலதன செலவினஙக்ள் 580.97 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.

ஜல் சக்தி அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட 2019-ம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதுகளில், தமிழ்நாடு முதலிடத்தை வென்றுள்ளது.

2,639 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கல்லணைக் கால்வாய் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதியுதவி ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

3,384 கோடி ரூபாய் செலவில் காவேரி உப வடிநிலத்தில் நீட்டித்தல், புதுப்பித்தல் மற்றும் நவீன மயமாக்கல் பணிகள், நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் நிதியுதவியுடன் செயல்படுத்துவதற்கு, நபார்டு வங்கி அனுமதித்துள்ளது. இத்திட்டத்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதியன்று தொடங்கி வைத்தார்.

933 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் உதவியுடன், கீழ் பவானி பாசனப் பகுதிகளில் நீட்டித்தல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

1,652 கோடி ரூபாய் செலவில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 24,468 ஏக்கர் பரப்பளவு ஆயக்கட்டு நிலங்கள் பயனடையும் வகையில், அத்திக்கடவு- அவிநாசி வெள்ளக் கால்வாய் திட்டம் 2021-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 565 கோடி ரூபாய் செலவில் மேட்டூர் அணையிலிருந்து வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பணிகள் விரைவில் முடிவடையும்.

தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்புத் திட்டத்திற்கான பணிகள், 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் முடிக்கப்படும். இத்திட்டத்தால், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள, 56,909 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் பயனடையும்.

காவேரி-தெற்கு வெள்ளாறு நதிகள் இணைப்பிற்காக 6,941 கோடி ரூபாய் மதிப்பில் கொள்கை அளவிலான ஒப்புதலை அரசு அளித்துள்ளது. முதல் கட்ட பணியாக, கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 331 கோடி ரூபாய் செலவில் வெள்ள நீர் செல்லும் கால்வாய்களை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதியன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பெரிய, நடுத்தர மற்றும் சிறிய பாசனம் குறித்த பணிகளுக்கான மூலதன நிதி ஒதுக்கீடு, 2020-21-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 4,882.45 கோடி ரூபாயிலிருந்து 2020-21-ம் ஆண்டு திருத்த மதிப்பீடுகளில் 6,389.22 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 6,453.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News