செய்திகள்
அருப்புக்கோட்டையில் வைகோ பேசிய காட்சி.

பணம் வாங்கி ஓட்டு போடக்கூடாது என்று தாய்–தந்தையிடம், இளைஞர்கள் வலியுறுத்த வேண்டும்: வைகோ பேச்சு

Published On 2016-04-25 13:01 IST   |   Update On 2016-04-25 13:00:00 IST
இளைஞர்கள், தாய், தந்தையரிடம் பணத்துக்கு ஓட்டு போடக்கூடாது. மீறி போட்டால் வருங்காலத்தில் நாடு நாசமாகி விடும் என வைகோ வலியுறுத்தினார்.

பாலையம்பட்டி:

அருப்புக்கோட்டை மற்றும் பரளச்சி பகுதியில் மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க., அ.தி,மு.க. ஆகிய இரண்டு கட்சி ஊழலையும் தமிழ்நாடு கண்டு நாசமாகி விட்டது. தமிழ்நாட்டில் எந்த குடும்பமும் நிம்மதியாக இருக்க முடியாத நிலையும், பெண்கள் பத்திரமாக வாழ முடியாத ஆபத்தும், பள்ளி மாணவர்கள் குடிக்கின்ற பெருங்கேடும் இருந்து வருகிறது.

இதனை தடுக்க எங்கள் அணிக்கு வாக்களித்தால் தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளை மூடுவோம். தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் மதுவை கொண்டு வந்தார். உற்பத்தி செய்யும் மது ஆலைகளை இரண்டு கட்சிகளும் வைத்துள்ளன. மதுவை ஓழிக்க பேராடிய சசிபெருமாளை ஜெயலலிதா அரசு சாகடித்தது.

தி.மு.க. கட்சியை கருணாநிதியும், ஸ்டாலினும் படுமோசம் செய்து விட்டார்கள். 2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கியுள்ளனர். ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கியுள்ளார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பிரச்சினை, நெசவாளர்கள் பிரச்சினை, வர்த்தகர்களுக்கு உலக வர்த்தக அமைப்பிலிருந்து விடுவிக்க ஏற்பாடு, மத்திய அரசுக்கு நெருக்கடி, தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சிங்கிள் விண்டோ சிஸ்டத்தில் 30 நாட்களுக்குள் உரிய அனுமதி வழங்கப்படும். 10 வருடம் ஆட்சி செய்த கருணாநிதியும், ஜெயலலிதாவும் இதனை செய்யவில்லை. ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. தொண்டர்கள் பலர் சாகிறார்கள். மனிதாபிமானமற்ற ஆட்சியை ஜெயலலிதா அரசு நடத்தி கொண்டிருக்கிறது.

இளைஞர்கள், தாய், தந்தையரிடம் பணத்துக்கு ஓட்டு போடக்கூடாது. மீறி போட்டால் வருங்காலத்தில் நாடு நாசமாகி விடும் என வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News