ஆளுங்கட்சிக்கு எடுபிடியாக தேர்தல் ஆணையர் செயல்படுகிறார்: வைகோ குற்றச்சாட்டு
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கியில் ம.தி.மு.க பொதுச்செயலாளரும் மக்கள் நலக்கூட்டணி அமைப்பாளருமான வைகோ பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–
முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் அதிக மதுக்கடைகளை திறந்து மக்கள் வாழ்க்கையை சீரழித்து விட்டார். நாள் ஒன்றுக்கு ஒரு குவார்ட்டர் குடிப்பதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்தை பிடிங்கிக்கொண்டு, அந்த குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள இலவசங்களை அ.தி.மு.க அரசு வழங்கி வருகிறது.மதுவால் வருமானம் பெறுவதில் அ.தி.மு.கவும், தி.மு.க.வும் கூட்டாக உள்ளது.
அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத்தின் நண்பர்கள் அன்புநாதன், செந்தில்நாதன் ஆகியோர் வீட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ.5 கோடியை பறிமுதல் செய்வதற்காக பறக்கும் படையுடன் சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அங்கு வெறும் ரூ.20 லட்சம் மட்டும் பறிமுதல் செய்ததாக கூறியுள்ளார். மீதி பணம் எங்கே போனது.ஏற்கனவே ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் இருந்து கண்டெய்னர் லாரியில் பணம் கடத்தப்படுவதாக நான் புகார் கூறினேன். ஆனால் 3 நாட்கள் மவுனமாக இருந்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி 4 வது நாள், சிறுதாவூர் பங்களாவில் ஒன்றும் இல்லை என்று கூறுகிறார்.
தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆளுங்கட்சிக்கு எடுபிடியா? அவர் என் மீது வழக்கு போட்டாலும் கவலை இல்லை.தே.மு.தி.க.,த.மா.கா., மக்கள் நலக்கூட்டணி மது ஒழிப்பு, ஊழலற்ற நல்லாட்சி, விவசாய கடன் தள்ளுபடி, லோக்ஆயுக்தா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன் வைத்து தேர்தலை சந்திக்கிறது. நிச்சயம் இக்கூட்டணி வெற்றி பெற்றால் விஜயகாந்த் முதல்– அமைச்சராவார். அது கூட்டணி ஆட்சியாக இருக்கும். முதல்–அமைச்சர் முதல் அனைவருக்கும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த தேர்தலில் தி.மு.க. வோ அல்லது அ.தி.மு.க.வோ வெற்றி பெற்றால் அடுத்து வரும் தேர்தல்களில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வை எதிர்த்து யாரும் 3–வது கூட்டணி வைக்கமாட்டார்கள். பின்னர் அவர்களை எதிர்க்கும் துணிவும் யாருக்கும் வராது. எனவே எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள், பெண்கள், புதிதாக வாக்களிக்க உள்ள ஒன்றரை கோடி வாக்காளர்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் நிச்சயம் இக்கூட்டணி ஆட்சியை பிடிக்கும். நேர்மையான , மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படும். மது இல்லாத தமிழகத்தை படைக்கும் ஆட்சி அமைய தே.மு.தி.க.,த.மா.கா.,மக்கள் நலக்கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.