செய்திகள்

சீர்காழி தொகுதி தி.மு.க. வேட்பாளருக்கு எதிராக போராட்டம்

Published On 2016-04-15 16:49 IST   |   Update On 2016-04-15 16:49:00 IST
சீர்காழி தொகுதி தி.மு.க. வேட்பாளரை மாற்றக் கோரி போராட்டம் நடைபெற்றது.
சீர்காழி:

தமிழகம் முழுவதும் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இத் தேர்தலில் நாகை மாவட்டம் சீர்காழி (தனி)தொகுதியில் போட்டியிட  முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் உள்பட 27 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.

பன்னீர் செல்வத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என கட்சியினர் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக சீர்காழி தொகுதி தி.மு.க. வேட்பாளராக கிள்ளை ரவீந்திரன் அறிவிக்கப்பட்டார்.

இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர். இது உள்ளூர் தி.மு.க. வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தொகுதிக்கு அறிமுகம் இல்லாத கிள்ளை ரவீந்திரனை மாற்ற வேண்டும் என தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேட்பாளரை மாற்றக் கோரி சீர்காழி புதிய பஸ்ய நிலையம் அருகே 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  போராட்டத்தின் போது தி.மு.க. கிளை நிர்வாகிகள் திருவாலி ரவிச்சந்திரன், மதி, திருவெண்காடு கிருஷ்ணசாமி மற்றொரு கிருஷ்ணசாமி உள்ளிட்ட 4 பேர் தங்கள் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தடுத்தனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து தி.மு.க.வினர் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் சீர்காழியில் பரபரப்பு நிலவியது.

போராட்டம் குறித்து அல்லி விளாகத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் கூறும் போது, தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தி.மு.க. வின் வெற்றி வாய்ப்பு குறைந்து விட்டது. தி.மு.க.வே அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு உதவியது போல் உள்ளது. வேட்பாளர் ஓட்டு கேட்டு தொகுதிக்குள் வந்தால் வரை தடுத்து நிறுத்துவோம். மாவட்ட செயலாளர் சமரம் செய்தாலும் ஏற்க மாட்டோம். அவரையும் திருப்பி அனுப்புவோம் என ஆவேசமாக தெரிவித்தார்.

சீர்காழி தொகுதி தி.மு.க. வேட்பாளரை மாற்றக்கோரி இன்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் பஸ் நிலையத்தில் தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு சையது, மாவட்ட பிரதிநிதிகள் மணிமாறன், ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் முத்துக்குமரன், நாகராஜன் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

போராட்டம் காரணமாக சீர்காழி-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேட்பாளரை மாற்றாவிட்டால் ஒட்டு மொத்த நிர்வாகிகளும் ராஜினாமா செய்வோம் என அவர்கள் தெரிவித்தனர்.

Similar News