கதம்பம்
ஒன்பது

மாறிப்போன ஒன்பது

Published On 2022-05-19 09:03 GMT   |   Update On 2022-05-19 09:03 GMT
தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்புநோக்குக.
எண்ணுப்பெயர் ‘ஒன்பது’ (9) பற்றிய பாவாணரின் கருத்து விளக்கம் :-

தொண்டு : தொள் + து = தொண்டு.

தொள் = தொளை.

உடம்பின் தொளைகள் ஒன்பதாயிருத்தலின், தொண்டு என்னும் பெயர் ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.

தொண்டு - தொண்டி = தொளை

ஒப்புநோக்குக: தொண்டை = தொளையுள்ளது.

ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது தான்.

தொண்டு + பத்து = தொண்பது

தொண்பது – தொன்பது – ஒன்பது.

தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது, எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை ஒப்புநோக்குக.

தொண்ணூறு என்னும் பெயர், முதலாவது 900 என்னும் எண்ணைக் குறித்தது.

தொண்டு + நூறு = தொண்ணூறு.

இதை அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்னும் பிறமூன்றாம் இட எண்ணுப்பெயர்களுடன் ஒப்புநோக்குக.

தொள்ளாயிரம் அல்லது தொளாயிரம் என்பது, முதலாவது, 9000 என்னும் எண்ணைக் குறித்தது.

தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் - தொளாயிரம்.

இதை ஆறாயிரம் ஏழாயிரம் எண்ணாயிரம் என்னும் பிற நாலாம் இட எண்ணுப் பெயர்களுடன் ஒப்புநோக்குக.

தொண்டு என்னும் பெயர் எங்ஙனமோ, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே உலகவழக்கற்றது. ஆயினும், செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில் தொடைத் தொகை கூறுமிடத்து,

மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
நொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே. (செய்.101)   

என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க வழங்கியுள்ளார்.

“தொண்டுபடு திவ்வின்” (மலைபடு கடாம்.21) என்றார் பெருங்கெளசிகனாரும்.

எண்ணுப் பெயர்களுள் தொண்டு என்னும் ஒன்றாம் இடப்பெயர் வழக்கொழியவே, பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம் இடத்திற்கும், ஆயிரத்தாம் இடப்பெயர் நூறாம் இடத்திற்குமாக ஒவ்வோரிடம் முறையே இறக்கப்பட்டன. பின்பு, ஆயிரத்தாம் இடத்திற்குப் பத்தாம் இடத்திலிருந்து ஒன்றாம் இடத்திற்கு இறங்கிவந்த ஒன்பது என்னும் பெயருடன், ஆயிரம் என்னும் பெயரைக் கூட்ட வேண்டியதாயிற்று.

எண்

பண்டைப்பெயர்

இற்றைப்பெயர்

9

தொண்டு

ஒன்பது (தொன்பது)

90

தொண்பது

தொண்ணூறு

900

தொண்ணூறு

தொள்ளாயிரம்

9000

தொள்ளாயிரம்

ஒன்பதினாயிரம்

 

  -தமிழ் நம்பி
Tags:    

Similar News

தம்பிடி