கதம்பம்
டாக்டர் மா.திருநாவுக்கரசு

மாணவர்களை நல்வழிபடுத்துவது எப்படி? நெறிபிறழும் மாணவர்களை சீர்படுத்துவது எப்படி?

Published On 2022-05-14 11:16 GMT   |   Update On 2022-05-14 11:16 GMT
சில காலத்திற்கு முன்னால் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர், ஒரு நாயை மாடியில் இருந்து தூக்கி கீழே போட்டதைப் பார்த்திருப்பீர்கள். இது ஊடகங்களில் வைரலாக பரவியது.
இன்றைக்கு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே ஆசிரியரை அவதூறாக பேசி தாக்க முற்படுவது, வகுப்பறையில் பாடம் நடத்தும் போது ஆட்டம் போடுவது, மேஜை நாற்காலிகளை போட்டு உடைப்பது, பள்ளி வளாகத்திலே புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற தகாத சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களில் மாணவர்கள் ஏன் ஈடுபடுகிறார்கள்..? இதனை தடுத்து அவர்களை நல்வழிபடுத்துவது எவ்வாறு? என்று பிரபல மனநல மருத்துவர் மா.திருநாவுக்கரசு அவர்களிடம் கேட்டோம். இதோ அவரின் பதில்...

உலகில் உள்ள மனிதர்களில் 10 சதவீதம் பேர் வித்தியாசமானவர்களாக தான் இருப்பார்கள். வேறுபட்டு இருப்பார்கள். இது அத்தனை ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.

இந்த பத்து சதவீதம்பேர் உலக வழக்கில் இருந்து மாறுபட்டுதான் சிந்தனை செய்வார்கள், மாறுபட்டு தான் செயல்படுவார்கள். இது காலம் காலமாக இருந்து வருகிறது. இதுநாள் வரை அந்த வித்தியாசங்களும் விகாரங்களும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. நாம் கேள்வி பட்டு மட்டுமே வந்தோம். இப்போது அவை பகிரங்கப்படுத்தப்பட்டு வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கின்றன.

மாணவர்களின் இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்கள் அரசுப்பள்ளிகளில் மட்டுமல்ல, தனியார் பள்ளிகளிலும் நடக்கிறது. இதில் என்னவொரு வினோதம் என்றால், இப்படி வித்தியாசமாக வேறுபட்டு நடப்பவர்கள், முதலில் மைனாரிட்டியாக இருந்தார்கள்.

இதனால் அவர்கள் தாங்களை வெளிப்படுத்திக்கொள்ள தயங்கினார்கள்.

இன்றைய சூழ்நிலையில் அதிலும் சமூக வலைதளங்கள் வந்த பிறகு, ஊடகங்கள் வந்த பிறகு எல்லாருமே பிரபலமாக வேண்டும் என்று நினைக்கத் தெடங்கிவிட்டார்கள். அதிலும் உடனே பிரபலமாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பிரபலமாவதற்கு ஒரே வழி உழைத்து எதையாவது சாதிக்கணும். அது இன்றைக்கு மிக மிக கடினமானது. எனவே மிகவும் இலகுவான வழிமுறையில் பிரபலமாக எல்லா மக்களும் நினைக்கிறார்கள்.

சில காலத்திற்கு  முன்னால் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவர், ஒரு நாயை மாடியில் இருந்து தூக்கி கீழே போட்டதைப் பார்த்திருப்பீர்கள். இது ஊடகங்களில் வைரலாக பரவியது.

நாயை மாடியில் இருந்து தூக்கிப்போட்டவர் எவ்வளவு கொடூரமானவர் என்று தான் நாம் நினைப்போம். அதனை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டவரும் அதைவிட கொடூர மனம் கொண்டவர் தானே? இந்த மாதிரியான வக்கிர செயல்களையும் விகாரங்களையும் பகிரங்கப்படுத்த இப்போது துணிந்து விட்டார்கள்.

உதாரணமாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய பள்ளி மாணவர்களின் ஒழுக்கக்கேடான செயல்களை எடுத்துக்கொள்வோம்.  உலகம் முழுவதும் அதனை தெரிந்து கொண்டோமே. இது கோடி கொடுத்தாலும் முடியாத காரியம்.
இந்த மாதிரி தான் இப்போது சினிமா, பாடல், கவிதை, டான்ஸ், விமர்சனம் என அத்தனை விசயங்களையும் கையாளுகிறார்கள். அதற்கு இவ்வளவு லைக்ஸ் வந்தது என்று சாதனையாக சொல்லப்படுகிறது.

இதிலிருந்து ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு வியாபார உத்தியாக பயன்படுத்துகிறார்கள்.

அன்றைக்கு குடும்பத்தில் பெரியவர்கள் பேப்பரை குழந்தைகளிடம் கொடுத்து படிக்க சொல்லுவார்கள். இன்றைக்கு அந்த மாதிரி படிக்க சொல்லக்கூடிய வகையில் செய்திகள் இல்லை. இப்போது நெறிமுறை தவறி நடக்கும் செயல்களையே ஊடகங்கள் மீண்டும் மீண்டும் போட்டு காட்டுகின்றன.

இன்றைக்கு எளிய முறையில், பெயர் கெட்டுபோனாலும் பராவாயில்லை. பிரபலமாக வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இது போன்று நினைப்பதற்கு காரணம் ஒழுக்கக்கேடான செயல்களை ஊடகங்கள் பெரிதுபடுத்துவதுதான். இன்று அசிங்கம் என்பதே இல்லை. இது மாதிரியான செயல்களை செய்வது தங்கள் சுதந்திரம், உரிமை என்று எண்ணுகிறார்கள். ஒழுக்ககேடான செயல்களை தயக்கம் இல்லாமல் செய்வதில் கூச்சம் நாச்சம் இல்லாமல் போய்விட்டது.

இதனை நெறிபடுத்த வேண்டும் என்றால் கல்வி கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அந்த காலத்தில் மொழிப் பாடம் முக்கியமாக கருதப்பட்டது. தமிழ் வாத்தியார் முக்கியமான ஆசிரியராக இருந்தார். மொழிப் பாடத்தில் நற்பண்புகள், ஒழுக்கம், அறங்கள், நியாங்கள், கதை, கவிதை என வாழ்வியல் பாடங்கள் சொல்லி கொடுத்தார்கள்.

ஆனால் கடந்த 20 வருடங்களாக அறிவியல் பாடத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மொழிப் பாடத்திற்கு  கொடுக்கப்படவில்லை. அதனால் அறம் என்பது சுத்தமாக பள்ளிகளில் இல்லாமல் போய்விட்டது.

இதனால் இன்றைய தலைமுறையினரிடையே 'எப்படியாவது..' என்ற எண்ணம் மேலோங்கி விட்டது. எப்படியாவது மார்க் வாங்கிட வேண்டும்.. எப்படியாவது அந்த கல்லூரியில் இடம் வாங்க வேண்டும்.. எப்படியாவது வேலையில் சேரவேண்டும்.. என ஒவ்வொரு விசயத்திலும் இப்படி இருக்கிறார்கள்.

முதலில் 'இப்படிதான் படிக்க வேண்டும்.. இப்படி தான் வேலையில் சேரவேண்டும்.. இப்படி தான் வாழ வேண்டும்.. என்ற நெறிமுறை மக்கள் மனதில் இருந்தது. இன்று 'எப்படியாவது..' என்பது தான் மக்களின் தாரக மந்திரமாக உள்ளது.

இன்று எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்று நினைப்பதால் தான் அந்தரங்க ரகசியங்கள் கூட பகிரங்கமாகி விட்டது. இதுவெல்லாம் சமூக அவலங்கள்.

சட்டதிட்டங்களால் இதனை மாற்ற முடியாது. மாணவர்களுக்கு இளம் பருவத்திலேயே தகுந்த முறையில் கல்வி கூடங்களில் அறம் கற்றுத்தரப்பட வேண்டும். ஆனால் முதலில் லஞ்சம் கொடுப்பதே அங்கிருந்து தானே தொடங்குகின்றது. பிள்ளையார் சுழியே அங்கே தான். என்ன செய்வது?

பள்ளி இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையும் மாணவர்கள் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா?

நான் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்வேன் என்கிறார்கள். இன்னும் சிலர் நான் வக்கீலாகி ஏழை எளியோருக்கு தொண்டு செய்வேன் என்கிறார்கள். பலர் ஆசிரியராகி இலவச கல்வி அளிப்பேன் என்கிறார்கள்.

பிற்பாடு அவர்கள் அந்த நிலைக்கு வந்த பிறகு அப்படியா நடந்து கொள்ளுகிறார்கள்?  அப்படி என்றால் நமது கல்வி முறையில், பயிற்சி முறையில்  ஏதோ பிரச்சினை இருக்கிறது என்று தானே அர்த்தம்.

பள்ளிகளில் அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறம் புறந்தள்ளப்பட்டுவிட்டது தான் இது போன்ற ஒழுக்கக்கேடான செயல்களுக்கு காரணம். அதனை களைய வேண்டும். அது ஒன்றே நல்ல சமுதாயத்தை உருவாக்கும்.

டாக்டர் மா.திருநாவுக்கரசு
மனநல மருத்துவர்
Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்