கதம்பம்
உடல்

உங்களுக்கான உணவு எது?

Update: 2022-05-13 09:17 GMT
உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் உடலின் வெப்பம் செயற்கையாக அதிகமாகும்போது நுரையீரல் சூடாகி, ஒட்டுமொத்த உடலின் பருவநிலையையும் மாற்றிவிடுகிறது.
வெளியே குளிர் இருந்தால், உடலின் உள்ளே வெப்பம் உருவாகும். வெளியே வெப்பம் இருந்தால், உள்ளே குளிர் உருவாகும். இவ்வாறான செயல்பாட்டினைத்தான் ‘எதிர்ச்சுழலியக்கம்’ என்று அழைக்கிறோம். இந்த இயக்கம் இல்லையென்றால், வெப்பம் மிகுந்த சூழலில் உடலும் வெப்பமடைந்து வெந்துபோகும். குளிர் சூழலில் உடலும் குளிர்ந்து உறைந்துபோகும். எதிர்ச்சுழலியக்கம் என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்டது. மனிதர்களும் பிற உயிரினங்களும் தாம் வாழும் நிலத்திற்கேற்ற வகையில் உணவு மற்றும் வாழ்க்கைமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

நிலத்தில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் காற்று, வெப்பம், நீர் ஆகியவை நிலத்தின் அடிப்படையில்தான் தேவைப்படுகின்றன. நிலத்திற்கும் உடலுக்குமான உறவை உறுதி செய்வதில் உணவுகளுக்கு முதன்மைப் பங்கு உண்டு.  கோடையில் பனை மரங்கள் நுங்கு மற்றும் பதநீர் தருவது இவ்வாறான உறவினால்தான்.

எந்தப் பருவத்திற்கு எது தேவை என்பதை அந்தந்த நிலத்தில் வாழும் உயிரினங்கள் நன்கு அறிந்துவைத்துள்ளன. இந்த மரபினை மீறி, உணவுப் பொருட்களை உட்கொள்ளும்போது, நிலத்திற்கும் புறச் சூழலுக்குமான உறவு மீறப்படுகிறது. விளைவாக, உடலின் எதிர்ச்சுழலியக்கம் கெட்டுப்போகிறது. குளிர்ப் பகுதிகளில் வாழ்வோருக்கான உணவுகளை, வெப்பப் பகுதிகளில் வாழ்வோர் உண்டால், அதற்கான விளைவுகள் உடலின் உள்ளே உருவாகும்.

வாழும் நிலத்தில் விளையும் உணவுகளை மட்டும் உட்கொண்டால், உடல் தனக்குத் தேவையான காற்று, வெப்பம், நீர் ஆகியவற்றைச் சேகரிக்கிறது. பருவநிலைகளுக்கேற்ப இந்த ஆற்றல்களைப் பயன்படுத்துகிறது.

இப்போது, உணவுகள் எல்லாம் சத்துகளின் அடிப்படையில் உட்கொள்ளப்படுகின்றன. இது மிக மோசமான நடைமுறை. அமெரிக்காவில் வாழும் மனிதர்களுக்கான உணவும் தமிழ்நாட்டு மனிதர்களுக்கான உணவும் நிச்சயமாக வேறுவேறானவை.

சத்துகளின் அடிப்படையில் உணவைப் பகுப்பது, முழுக்க முழுக்க வணிக நோக்கங்களுக்கானது. ஒருபக்கம் உணவுப் பொருட்கள் விற்பனை, மறுபக்கம் இந்த உணவுகளால் உருவாகும் நோய்களுக்கான மருத்துவ விற்பனை என சமகாலச் சூழல் சதிவலைகளால் பின்னப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலம் தாண்டிய உணவுகளை உட்கொள்வதால், ஆற்றல் சீர்கேடுகள் உருவாகின்றன. இப்போதைய உணவுப் பழக்கங்கள் நிலத்திற்கு ஒவ்வாதவையாக மாறியுள்ளன. இதனால், உடலின் உள் ஆற்றல்கள் மிகையாக செலவழிக்கப்படுகின்றன.

கோதுமையைச் செரிப்பது அது விளையும் நிலத்தில் வாழும் உடல்களுக்கு எளிதானது. தமிழகம் போன்ற நிலங்களில் வாழ்வோருக்கு அதே கோதுமையைச் செரிமானம் செய்ய, உடல்கள் கடினப் பணி செய்ய வேண்டும். குறிப்பாக, அதிகமான வெப்ப ஆற்றலைச் செலவழித்துத்தான் கோதுமையைத் தமிழகத்து உடல்கள் செரிக்க வேண்டியுள்ளது. இதேபோல ஒவ்வொரு உணவு வகையையும் பட்டியலிடுங்கள்.

சாக்லெட், ஐஸ்க்ரீம் ஆகிய இரண்டை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால் இவ்விரு உணவுகளுக்காகவும் உடல் வெளிப்படுத்தும் வெப்ப ஆற்றல் மிக அதிகமானது. ஒவ்வொரு முறை ஐஸ்க்ரீம் உண்ணும்போதும் அதன் மிகைக் குளிர்ச்சியைச் சமாளித்து சீரான வெப்பநிலையை உருவாக்குவதற்காக உடல் தன்னை வெப்பமாக்கிக் கொள்கிறது. இந்த வெப்பம், உடலுக்குத் தேவையற்ற கூடுதலானது மட்டுமல்ல உடலின் உள்ளுறுப்புகளின் பருவநிலையைச் சிதைப்பதுமாகும்.

இவ்வாறான திடீர் வெப்ப உருவாக்கங்களின்போது நுரையீரல் மிக அதிகமாக வெப்பமடைகிறது. ஏனெனில், உடலின் குளிர்ச்சியைப் பராமரிக்கும் பணியில் நுரையீரலுக்குத்தான் முதன்மைப் பங்கு உள்ளது. நுரையீரல்தான் உடலின் மரம். புறத்தில் உள்ள மரங்களின் மூச்சுக் காற்றை உள்வாங்கும் நுரையீரல், உடலின் அகத்தில் மரங்களின் பணியைத்தான் முதன்மையாகச் செய்கிறது.

உணவு மற்றும் பழக்கவழக்கங்களால் உடலின் வெப்பம் செயற்கையாக அதிகமாகும்போது நுரையீரல் சூடாகி, ஒட்டுமொத்த உடலின் பருவநிலையையும் மாற்றிவிடுகிறது. இதனால், கல்லீரல், கருப்பை, விந்துப் பை, சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் தமது இயல்பான பருவநிலையை இழக்கின்றன. இந்த நிலை நீடித்தால் உடலின் செயல்பாடுகள் முடங்கிப் போகும். மூளை நரம்புகளின் திடீர் செயலிழப்பிற்கும் கூட இவ்வாறான மிகை வெப்பம் ஒரு காரணம்.

இந்த நிலையைச் சமாளிப்பதற்காக, உடலின் செல்களில் இருக்கும் நீர்மம் உடனடியாக வெளியேற்றப்படுகிறது. இந்த நீர்மம், உடலின் கோடானு கோடி செல்களிலும் உறைந்திருப்பதுதான். வியர்வை, கோழையாக வெளியேறும் எச்சில், அதிகமான சிறுநீர் ஆகிய மூன்றும் இந்த நீர்ம வெளியேற்றத்தில் முதன்மையானவை.

சளி வெளியேற்றம், தும்மல், மூச்சிரைப்பு, மாதவிலக்குச் சீரின்மை (அடிக்கடி உதிரம் தேங்கிவிடுதல்), உடலுறவு உறுப்புகளில் சோர்வு ஆகியவை இந்த நிலையின் வெளிப்பாடுகளில் முதன்மையானவை.

மூச்சிரைப்பு, தோல் தொல்லைகள், விந்தணுக்களின் உயிர்த்தன்மைக் குறைபாடு, உடலின் உள்ளும் புறமும் உருவாகும் கட்டிகள் ஆகியவை இச்சிக்கலின் நீண்டகால விளைவுகளில் முதன்மையானவை.

இப்போதுள்ள உணவுப் பழக்கங்களின் பெரும்பாலானவை இவ்வாறான உடல் வெப்பத்தைத் தூண்டக் கூடியவைதான். பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட எல்லா உணவுகளும் உடல் வெப்பத்தைத் தூண்டுபவைதான். இதன் விளைவுகளைத்தான் இப்போதைய சமூகம் பல்வேறு நோய்களாக அனுபவிக்கிறது.

அதாவது ஒவ்வொரு நாளும் உடலுக்குள் செலுத்தப்படும் முறையற்ற உணவுகள், மருந்துகள் ஆகியவை சேர்ந்து உடலின் இயல்பான பருவநிலையை மாற்றிக்கொண்டுள்ளன.

இப்போது தேவை வாழ்வியல் கொள்கைதானே தவிர, விதவிதமான மருத்துவமுறைகள் அல்ல. ஏனெனில், வாழ்வியல் கொள்கையை இழந்ததால் உருவாகும் உடல் தொல்லை அது. உடலின் பருவநிலை இயல்பாக இருந்தால் எந்த உடல் தொல்லையும் எளிதில் விலகும்.

- அகர முதல்வன்
Tags:    

Similar News