கதம்பம்
ரமணர்

ரமணர் எனும் பேரொளி

Published On 2022-05-07 11:20 GMT   |   Update On 2022-05-07 11:20 GMT
பகவான் ரமணர் சொல்வார்; கடவுளை ஒவ்வொருவரும் அவரவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.
அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையின் தென்புற அடிவாரத்தில் அமைந்துள்ளது, உலகப்புகழ் பெற்ற ரமணாஸ்ரமம். இது அமைதியையும் நிம்மதியையும் தேடி வருபவர்களுக்கு அவற்றை நல்கக்கூடிய ஆனந்த நிலையம்.

ரமணர் எத்தனையோ உபதேசங்களையும் அருள்மொழிகளையும் நமக்கு வழங்கி உள்ளார். அவற்றுள் முக்கியமான உபதேசம் - நான் யார்? என்னும் ஆன்ம விசாரம்.

ரமணரது அவதாரம் அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள திருச்சுழியில் 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி பின்னிரவு ஒரு மணிக்கு  நிகழ்ந்தது. நடராஜப் பெருமானுக்கு உகந்த திருவாதிரை தினத்தில், வழக்கறிஞர் சுந்தரம்மய்யர்-அழகம்மையார் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக வேங்கட்ராமன் அவதரித்தார்.

திருச்சுழியிலேயே கல்வி கற்கத் தொடங்கினார். பின் திண்டுக்கல்லிலும் மதுரையிலும், படித்தார். ஆனால், படிப்பு பிரகாசிக்கவில்லை, விளையாட்டும் ரசிக்கவில்லை.

சிறுவயதில் இருந்தே அருணாசலம்.. அருணாசலம் என்கிற வார்த்தை வேங்கடராமனின் மனதில் ஏனோ ஒலித்துக் கொண்டிருந்தது.  எது அருணாசலம்? இதன் பொருள் என்ன? ஏன் என் மனதில் ஒலிக்கிறது என்றெல்லாம் வேங்கடராமன் குழம்பிக் கொண்டே இருந்ததில், வருடங்கள் கரைந்தன.

அது 1895-ஆம் ஆண்டு நவம்பர் மாதம்... வேங்கடராமனுக்கு 16 வயது, வாழ்வில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய சம்பவம் அன்று நிகழ்ந்தது. இதுதான் அருணாசலேஸ்வரனின் உத்தரவோ?

வக்கீல் சுந்தரமய்யர் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்தார். அவரை எங்கிருந்து வருகிறீர்கள்? என்று வேகங்கடராமன் வெகு இயல்பாகக் கேட்க, அருணாசலத்தில் இருந்து வருகிறேன் என்று கூறினார். அந்த உறவினார்.

அவ்வளவுதான்.. அருணாசலம் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் வேங்கடராமனின் உடலெங்கும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.  உள்ளத்தில் இனம் புரியாத பரவசம். அருணாசலத்தின் ஏக்கமும் தாக்கமும் உள்ளத்தில் குடி இருக்க... ஒரு வருடம் உற்சாகமாய் ஓடிற்று.

1896-ல் அந்த நிகழ்வு. அப்போது மதுரையில் சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். வேங்கடராமன். மாடியில் இருந்தார். ஏனோ தெரியவில்லை,  ஒருவித பயம் திடீரென அவரைக் கவ்விக் கொண்டது. நான் இறந்து விடுவேனோ? என்று அவருக்குத் தோன்றியது. ஆனால், தேகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை, நோயும் இல்லை; நொடியும் இல்லை. நன்றாகத்தான் இருந்தார். ஆனால், இந்த உணர்வை யாரிடமும் சொல்லவில்லை. தனக்கு வந்ததைத் தானே தீர்த்துக் கொள்ள விழைந்தார்.

இந்த அனுபவம் அரை மணிக்குள் நடந்தேறி விட்டது. மரண பயம் சிட்டுப் போல பறந்தது. அவரது மனம் ஆத்ம தியானத்தில் ஆழ்ந்தது. இந்த அனுபவம் குறித்துப் பின்னாட்களில் மகரிஷியே எழுதுகிறார்.

திடீரென்று ஏற்பட்ட இந்த சம்பவம் என்னைத் தீவிர யோசனையில் ஆழ்த்தியது. சரி, சாவு நெருங்கி விட்டது. சாவு என்றால் என்ன? எது சாகிறது? இந்த உடல்தானே செத்துப் போகிறது என்று எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டு பிணம் போல் விறைக்குமாறு கைகால்களை நீட்டிப்படுத்தேன். இந்த உடம்பு செத்து விட்டது என்று உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். இதை மயானத்துக்குக் கொண்டு சென்று எரித்து விடுவார்கள். இது சாம்பலாய் போகும்.

ஆனால் இந்த உடம்பின் முடிவுடன் நானும் இறந்து விட்டேனா? இந்த உடல் நான்தானா? ஆனால், இந்த உடலுக்கும் அப்பால்கூட நான் என்ற சொரூபத்தின் சக்தியும் தொனியும் ஒலிக்கிறதே.... ஆகவே நான்தான் ஆத்மா.... உடலுக்குள் கட்டுப்படாத ஒரு வஸ்து என்ற முடிவுக்கு வந்தேன்-இப்படிக் குறிப்பட்டு  இருக்கிறார்.

சாகப் போகிறேன் என்கிற எண்ணம் வந்த அடுத்தடுத்த நாட்களில் வேங்கடராமனின் செயல்களில் கூடுதல் மாற்றங்கள் தெரிந்தன. வீட்டில் இருக்கிற எவரையும் மனம் நினைக்கவில்லை. தோழர்களை மறந்தார். விளையாட்டும் உணவும் சுத்தமாக மறந்தே போயின. படிப்பு செல்லவே இல்லை. உற்றாரும் உறவினர்களும் வேகங்கடராமன் மீது வெறுப்பும் கோபமும் கொண்டனர்.

ஆறு வாரங்கள் சென்றன. ஆசிரியர் கொடுத்த வேலையை எழுதி முடிக்காததால் அதன் மீது வெறுப்பு வந்தது. பூர்த்தி செய்யப்படாத நோட்டை மூடினார். கண்களையும் மூடினார் தியானத்துக்கு.

இதன் பின் அண்ணனுடன் ஏற்பட்ட ஒரு வாக்குவாதம் வேங்கடராமனை வீட்டை விட்டுத் துரத்தியது. வீட்டில் கோபம் என்றால், சிலர் என்ன செய்வார்கள்.... சினிமாவுக்கு, பூங்காவுக்கு, சொந்தக்காரர் வீட்டுக்கு-இப்படித்தானே பயணிப்பார்கள்?

ஆனால், வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வேங்கடராமன் சிந்தித்த மறுகணம் அவருக்கு அருணாசலம் நினைவு வந்தது.  ஃபீஸ் கட்டுவதற்காக அண்ணன் நாகசாமி ஐந்து ரூபாய் கொடுத்திருந்தார்.

கடகடவென்று தன் பயணம் குறித்து ஒரு லெட்டார் எழுதினார். அத்துடன், அண்ணன் கொடுத்த ஐந்து ரூபாயில் இருந்து மூன்றைப் பாத்திரப்படுத்திக் கொண்டார். மீதி இரண்டு ரூபாயையும், தான் எழுதிய லெட்டரையும் வீட்டார் பார்வைபடும்படியான இடத்தில் வைத்து விட்டு, ஒரு அட்லஸைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு ரெயில் நிலையம் புறப்பட்டார். அன்றைக்குப் பார்த்து இவர் போக வேண்டிய ரெயில் தாமதமாக வந்தது. ரெயிலில் ஏறி அமர்ந்தார்.

1896 செப்டம்பர் முதல் தேதி திருவண்ணாமலையில் இருந்தார். அந்த புனித பூமியில் காலடி பட்டதும், அருணாசலேஸ்வரர் கோயிலை நோக்கி ஓடினார். ஆச்சரியம்-கோயிலில் அர்ச்சகர்கள் உட்பட பக்தர்கள் கூட்டமே இல்லை. வேங்கடராமன் பேரின்பம் பெற வேண்டும் என்பதற்காக இறைவனே இப்படி ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கலாம்.

வெளியே வந்தார்.  எண்ணியது ஈடேறிப் போகும் ஆனந்தத்தில் திருவண்ணாமலை வீதிகளில் நடந்தார். ஐயன் குளத்தருகே வந்ததும், தன் கையில் இருந்த பலகாரப் பொட்டலத்தைத் தூக்கி எறிந்தார். தற்செயலாக அப்போது வேங்கடராமனுக்கு அருகில் வந்த ஒருவர், முடி எடுக்க வேண்டுமோ? என்று கேட்டார்.

எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடக்கிறது.  குடுமி அகன்றது. அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்தார். ஒரு கோவணத்துக்குத் தேவையான துண்டை மட்டும் கச்சிதமாகக் கிழித்தார். எஞ்சிய துணியை ஒரு பந்தாகச் சுருட்டி, புணூலையும் மிச்சம் இருந்த ரூபாயையும் சேர்த்து குளத்தில் வீசி எறிந்தார்.

மீண்டும் அருணாசலேஸ்வரனைத் தரிசிக்க அவரது மனம் விரும்பியது. குளிப்பது தேவை இல்லை என நினைத்தார். கோயிலுக்கு நடந்தார். இறைவனே திடீரென மழையைப் பொழிவித்து வேங்கடராமனைக் குளிக்க வைத்தான்.

ஆயிரங்கால் மண்டபத்தில்தான் தவம் துவங்கியது. விஷமக்காரச் சிறுவர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை. இதை அடுத்து, பாதாளலிங்கம் இருட்டு குகைக்கு மாறினார். பார்த்தாலே உள்ளுக்குள் பயத்தை வரவழைக்கக்கூடிய இடம்.  ஆனாலும், தவம் தொடர்ந்தது.

ஒரு சிறுவன் இங்கே அமர்ந்து தவ யோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறான் என்று சேஷாத்ரி சுவாமிகள்  தெரிந்து  கொண்டார். ஈ, எறும்பு, பூச்சிகளுக்கு இரையாக உடலின் கீழ்ப்பாகம் அரிக்கப்பட்டு, ரத்தமும் சீழும் கட்டி கட்டியாகத்தெரிந்தது. பழனிச்சாமி  என்னும் ஒருவருடன் உடலை  சுத்தம்  செய்து, குடிக்க நீராகாரம் கொடுத்தார்.

ஆனால் வேங்கடராமனின் உள்மனம் துன்பத்தை அறியவில்லை. இந்தப் பக்குவத்தைப் பெற்ற வேங்கடராமனின் தவயோகத்தை உணர்ந்து அங்குள்ள சாதுக்கள் மரியாதை செய்தனர்.  இந்த இடம் பலருக்குத் தெரிந்து கூட்டம் கூட்டமாக  மக்களின் வரவால், வேறு இடம் மாறுவதற்கு  அவர்க்கு உதவினர்.

எங்கெங்கு போனாலும் வேங்கடராமனை தேடி வந்து பக்தர்கள் தரிசித்தனர்.  அழுக்கடைந்த மேனியோடு, நகங்கள் வளர்ந்த விரல்களோடு பவழக்குன்றின் கரடுமுரடான ஒரு பாறையில் படுத்திருந்த தன் மகனை தாய் அழகம்மையும் ஒரு நாள் தரிசித்துக் கண்ணீர் சிந்தனாள்.

வேங்கடராமனை வீட்டுக்கு வரவழைக்கும் முயற்சிகள் பலராலும் எடுக்கப்பட்டு, அனைத்தும் தோல்வியில் முடிந்தன.  சம்ஸ்க்ருதப் பண்டிதரான கணபதி சாஸ்திரிகள் என்பவர் வேங்கடராமனின் அருளுக்குப் பாத்திரமானார். சீடரானார். இவர்தான் வேங்கடராமனுக்கு ரமண மகரிஷி என்று பெயர் சூட்டினார். அதுவரை பாலசுவாமி என்றே அழைத்து வந்தனர். விருபாட்சி குகை, கந்தாஸ்ரமம், பாலாக்கொத்து என பல இடங்களில் வாசமும் தவமும் தொடர்ந்தது. இறுதியில் அடிவாரம். அதுவே ரமணாஸ்ரம்மாக உருவானது.

தன் இறுதி மூச்சு வரை எல்லோருக்கும் பாகுபாடு இல்லாமல் தரிசினம் தந்தார். 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8.47-க்கு பத்மாசனம் இட்டவாறே அமர்ந்து மூச்சை ஒடுக்க, பரிபூரணமாய் பிரகாசித்தார்.

பகவான் இருந்த அறையின் வாயிலில் ஒரு பேரொளி தோன்றி அந்த அறையையும் சுற்றுப்புறத்தையும் வியாபித்துப் பரவி, பின் வெட்டவெளியில் - வான்வெளியில் கலந்து மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து அருணாசலத்தின் உச்சிக்குப் பின் சென்று மறைந்தது.

பகவான்ரமணர் சொல்வார்; கடவுளை ஒவ்வொருவரும் அவரவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.

இந்த தேடல் எப்படி சாத்தியம்? பால் பிரண்டனுக்கு பகவான் சொன்னதே இதற்குப் பதில். தேடலுக்குத் தேவையானவற்றை ஒரு குரு தரலாம். ஆனால், இதை அவரவர் தனிப்பட்ட அனுபவத்தால்தான் உணர முடியும். இதற்கான காலம் எவ்வளவு என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. இது தனி மனிதர்களின் பக்குவத்தைப் பொறுத்தது. தீப்பிடிக்க வெடிமருந்துக்கு நொடி போதும். ஆனால், நிலக்கரிக்கு அதிக நேரம் தேவை.

-அனு
Tags:    

Similar News