கதம்பம்
திருவள்ளுவர்

வாழ்நாள் துணை!

Published On 2022-04-29 11:22 GMT   |   Update On 2022-04-29 11:22 GMT
வாழ்நாளை வீழ்நாள் ஆக்காமல், நாளும் நல்லவற்றைச் செய்துவந்தால், அது ஒருவனது வாழ்நாளில் ஏற்படும் துன்ப இடையீடுகளை அடைக்கும் கல்! என திருவிக காட்டிய வழியில் நின்று சிந்தித்தவர் தமிழண்ணல்.
தமிழ் இரண்டு கிங்சைஸ் நோட் வாங்கி வரச் சொன்னார்.  புக் ஸ்டோரில் நின்றேன்.

எனக்கு அருகில்  ஓர் இளைஞன் திருக்குறள் புத்தகம் வாங்கினான்.

கவனித்தால்.. அவன் கோகுல், என் மாணவன். இப்போது சென்னையில் விஸ்காம் படிக்கிறான். தான் எடுத்த சில குறும்படங்கள்,  ஆல்பங்களை அவ்வப்போது காட்டுவான்.

‘என்ன திருக்குறள் எல்லாம் வாங்க ஆரம்பிச்சிட்ட?’ கேட்டேன்.

சிரித்தான்...

வகுப்பில் குறள் நடத்தும்போது கொட்டாவி விட்டவன்தான் கோகுல்.

‘ பஸ்ஸில் பயணம் செய்யும்போது  படிக்க சார்!’ என்றான்.

ஆச்சரியமாக இருந்தது.

அவன் வயதில் பஸ் பயணங்களின்போது நான் வார இதழ்கள்தாம் படித்திருக்கிறேன்.

அவனது விஸ்காம் படிப்பு குறள் நோக்கி அவனை இந்த இளம் வயதிலேயே நகர்த்தியிருக்கிறது.
 
அறிவு என்பது  உண்மையில் மனித இயல்பின் ஒரு பகுதி  இல்லை! என்பார் மிஷல் ஃபூக்கோ.

அனுபவ மோதல்கள், போரின் விளைவுகள்,  வாழ்வில் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மற்றும் வாய்ப்புகள் ஆகியவையே  அறிவை உருவாக்குகின்றன.

அறிவு  உள்ளுணர்வா? எனில் அல்ல. அறிவு  இயற்கையானதா? எனில் இல்லை.

அறிவு இயற்கைக்கு எதிரானது  போலவே, அது ஓர் எதிர் உள்ளுணர்வு.

நமது மரபு வழிப்பட்ட உள்ளுணர்வுகளிலிருந்து தப்பித்து, விலகப் பயன்படும் எதிர் உள்ளுணர்வு!

இந்த எதிர் உள்ளுணர்வை வளர்த்துக் கொள்ளும் விழைவே, என் மாணவன் கோகுலை திருக்குறள் வாங்க உந்தியிருக்க வேண்டும்.
‘நான் மொழியில் ஆர்வமாக உள்ளேன், ஏனெனில் அது என்னை காயப்படுத்துகிறது அல்லது மயக்குகிறது!’ என்றவர் அமைப்பியல் சிந்தனையாளர்களுள் ஒருவரான ரோலண்ட் பார்த்ஸ்.

திருக்குறள் என் மொழி. அது,  அவ்வப்போது என் காதலியைப்போல காயப்படுத்தியிருக்கிறது, மயக்கியும் வருகிறது.  2000 ஆண்டுகள் கழிந்தும் திருக்குறள் மீது இளைஞர்களுக்கு ஏன்  ஆர்வமேற்படுகிறது?

ஏனெனில் மணக்குடவரும், பரிமேலழகரும், காலிங்கரும், மு. வ.வும் வாசித்த குறளன்று நாம் வாசிப்பது.

திருக்குறளுடைய உறுதியான அர்த்தத்தின் மீது, இன்று  ஒவ்வொரு தனிப்பட்ட வாசகரின் விளக்கமும் முதன்மையைப் பெறுகிறது.
கோகுலிடம் குறளை வாங்கிப் பிரித்தேன். அது நம் கண்ணில் காட்டும் குறளே இன்றைக்கான நம் சேதி! என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டேன்.

அறன் வலியுறுத்தல் அதிகாரம் 38 வது குறள் கண்ணில் பட்டது.

‘வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்’

‘ஒருவன் நாள் தவறாது நல்லது (அறம்) செய்தால் அவன் பிறவி வழி அடைபடும்’ என்பதுதான் இதன் மரபு வழியான  பொருள்.
‘வாழ்நாள் வழியடைக்கும் கல்’

இப்படி எழுத வள்ளுவனால்தான் முடியும். ஈராயிரம் ஆண்டுகளாக இச்சொற்றொடர் திறந்து கிடக்கிறது.

எந்த அர்த்தங்களாலும் தன்னை நிரப்பிக் கொள்ளாமல் ஒரு காலி பாத்திரம் போல்  புதுவாசகனிடம் தன்னை ஒப்படைக்கிற சொற்றொடரிது.

பழைய உரையாசிரியர்களுக்கு , ‘மோட்சத்திற்கு ஏறுவதற்குத் தடையாகின்ற எமன் வருகிற வழியை அடைக்கும் கல்!’லாக இது தென்பட்டது.

‘பல்பிறப்பு, மறுபிறப்பு, வினைப்பயன் என்பனவற்றை அடியாகக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்தலைத் தடுப்பது’ என எழுத மதநம்பிக்கையாளனா வள்ளுவன்? இருக்க முடியாது.

கு.ச.ஆனந்தன், திருவிக,  தமிழண்ணல் போன்றோர் விலகி சிந்தித்தனர்.

வாழ்நாளில் தீமைவரும் வழியை அடைக்கும் கல் என இவர்கள் சிந்தித்தார்கள்.

வள்ளுவர் பிறப்பறுக்க எண்ணுபனில்லை..

இவ்வாழ்வின் மேன்மைகளைப் பாடியவன்.

வாழ்நாளை வீழ்நாள் ஆக்காமல், நாளும் நல்லவற்றைச் செய்துவந்தால், அது ஒருவனது வாழ்நாளில் ஏற்படும் துன்ப இடையீடுகளை அடைக்கும் கல்! என திருவிக காட்டிய வழியில் நின்று சிந்தித்தவர் தமிழண்ணல்.

இதைதான் வள்ளுவர் ‘நவில்தொறும் நூல் நயம்‘ என்கிறார்.

கோகுலுக்கு குறள், இப்படி மேலும் புதிய திறப்புகளை உருவாக்கக் கூடும்.  

வள்ளுவன் தமிழரின் வாழ்நாள் துணை!

-கரிகாலன்
Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்