கதம்பம்
எம்ஜிஆர் - கக்கன்

இவர் யார் தெரியுமா?

Published On 2022-04-21 11:30 GMT   |   Update On 2022-04-21 11:30 GMT
காமராஜர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி துறை, உள்துறை அமைச்சராக இருந்து அத்தனை அரசு மரியாதைகளையும் பார்த்தவர் கக்கன்.
அது 1980. மதுரை அரசு பொது மருத்துவமனை.  அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மேயர் மதுரை முத்து, சிகிச்சைக்காக அங்கே அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்காகத்தான் மதுரை அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார் எம்ஜிஆர்.
பார்த்து முடித்து விட்டார். இனி புறப்பட வேண்டியதுதான்.
நேரம் ஆக ஆக எம்ஜிஆரை பார்க்க பொதுமக்கள் கூட்டம் கூடிக் கொண்டே இருந்தது.
எம்ஜிஆர் தன்னை சுற்றிலும் பார்த்தார். சற்று தள்ளி நின்ற காளிமுத்து எம்ஜிஆருக்கு அருகே ஓடோடி வந்தார்.
“போகலாமா ?” என்றார் எம்ஜிஆர்.
அப்போதுதான் எம்ஜிஆரின் காதில் ஏதோ சொன்னார் காளிமுத்து. ஒரு கணம் திகைத்துப் போனார் எம்ஜிஆர். “நிஜமாகவா ?”
“ஆமாம்.”
“இதை ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை ?”
சட்டென்று மருத்துவமனைக்குள் மீண்டும் நுழைந்தார் எம்ஜிஆர்.
“எங்கே இருக்கிறார் அவர் ?”
விறுவிறுவென்று நடந்து வந்த எம்ஜிஆரை அந்த சாதாரண வார்டுக்குள் அழைத்து சென்றார்கள் மருத்துவ அதிகாரிகள். உள்ளே நுழைந்த எம்ஜிஆர் கண் கலங்கி நின்றார்.
அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத அந்த வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர் கக்கன்.
இடுப்பில் ஒரு சாதாரண துண்டோடு எளிமையான தோற்றத்தில் இருந்தார் அவர்.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் பொதுப்பணி துறை, உள்துறை அமைச்சராக இருந்து அத்தனை அரசு மரியாதைகளையும் பார்த்தவர்.
“அவருக்கே இந்த கதியா?” குமுறலுடன் அங்கிருந்த மருத்துவ அதிகாரிகளை அழைத்தார் எம்ஜிஆர்.
“இங்கே வாங்க. இவர் யார் எனத் தெரியுமா ? இவர் வகித்த பதவிகள் என்னென்ன தெரியுமா ?
இவர் போன்றவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தால்தான் நாம் இன்று நிம்மதியாகவும் சுகமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உடனடியாக இவருக்கு தனி அறை வசதியும் உயர்ந்த மருத்துவ சிகிச்சையும் அளியுங்கள்.” 
இப்படி சொல்லி விட்டு கக்கனிடம் பணிவாக கேட்டார் எம்ஜிஆர். “ஐயா, உங்களுக்கு நான் என்ன செய்து தரணும் சொல்லுங்க. உடனே செய்து கொடுக்கிறேன். தயவு செய்து சொல்லுங்க ஐயா.”
கக்கன் புன்னகையுடன் எம்ஜிஆர் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தார். பின் கை கூப்பி வணங்கினார். “நீங்க நேர்ல வந்து பார்த்ததே போதும். எனக்கு வேறு எந்த விதமான தேவையும் இல்லை.”
கூப்பிய அவர் கைகளை சிலிர்ப்போடு  இறுகப்பற்றிக் கொண்டார் எம்ஜிஆர். இப்படி ஒரு தேவைகள் அற்ற மனிதனை, எம்ஜிஆர் தன் வாழ்நாளில் அதுவரை கண்டது இல்லை.
ஆம். தேவைகள் அற்ற மனிதன் தெய்வத்துக்கு சமமானவன்.
கக்கனை தொட்ட அந்த நொடியில் கடவுளை தொட்டது போல உணர்ந்தார் எம்ஜிஆர்.
         -ஜான் துரை ஆசிர் செல்லையா
Tags:    

Similar News

நாத்தனார்
அருமருந்து