கதம்பம்
தேர்வு

பரிட்சைக்கு நேரமாச்சு- பேராசிரியர் இரா.மோகன்

Published On 2022-04-11 11:27 GMT   |   Update On 2022-04-11 11:27 GMT
பாடங்களைக் குருட்டு மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதனால் நிலைத்த பயன் விளையாது. எதையும் மனம் கலந்து, பொருள் உணர்ந்து, கருத்தறிந்து படிக்க வேண்டும். அப்போது தான் படித்தது மனதில் தங்கும்.
வர இருக்கும் தேர்வை எதிர்கொள்ளுவது எப்படி? அதில் அதிக மதிப்பெண்களைப் பெற்று சிறந்த முறையில் வெற்றி வாகை சூடுவது எப்படி? கல்வி பயின்று கொண்டிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் முன்னே நின்று கொண்டிருக்கும் இரு முக்கியமான வினாக்கள் இவை! எனது நீண்ட ஆசிரிய அனுபவத்தில் இருந்து இன்றைய மாணவ-மாணவியர்க்கு நான் கூற விரும்பும் வழிகாட்டுதல்கள் இவை தான்:

1. ‘வைகறைத் துயில் எழு’ என்பது நமது ஆன்றோர் அமுத மொழி. எனவே விடியற்காலையில் எழுந்து படிக்கும் வழக்கத்தை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். புலர்காலைப் பொழுதில் படிப்பது மனத்தில் பசுமரத்து ஆணி போல் பதியும்.

2. வாழ்வில் எதையும் திட்டமிடக் கற்றுக்கொள்ள வேண்டும். ‘எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், எட்டு மணி நேரம் வேலை பார்க்க வேண்டும், சரி, எத்தனை மணி நேரம் வாழ வேண்டும்?’ என்று கேட்பார் ஒரு புதுக்கவிஞர்.

ஒரு நாளின் 24 மணி நேரத்தை மூன்று 8 மணி நேரமாகப் பகுத்துக் கொண்டு, அதில் கல்விக் கூடத்திற்குச் செல்லும் நேரம், தூங்கும் நேரம் தவிர மீதி நேரத்தில் என்ன என்ன பணிகளை, எப்படி  செய்து முடிப்பது என்று இளைஞர்கள் திட்டமிடக் கற்றுக்கொள்ள வேண்டும். திட்டமிடுவதோடு நின்று விடாமல், அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

3. எதையும் நாளைக்கு என்று ஒத்திப் போடக் கூடாது; தள்ளி வைக்கக் கூடாது. அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படித்து முடித்து விட வேண்டும். ‘ஒன்றே செய்க, ஒன்றும் நன்றே செய்க, நன்றும் இன்றே செய்க, இன்றும் இன்னே (இப்பொழுதே) செய்க!’ என்னும் முன்னோர் வாக்கு இவ்வகையில் மனங்கொளத்தக்கது.

4. படிக்கும் பாடங்களைச் சிறுசிறு குறிப்புகள் வடிவில் தனித்தாளில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஓய்வு நேரங்களில், அந்தக் குறிப்புகளைப் பார்த்தாலே போதும், படித்தவை எல்லாம் நினைவுக்கு ஓடி வந்து விடும்.

5. பாடங்களைக் குருட்டு மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது. அதனால் நிலைத்த பயன் விளையாது. எதையும் மனம் கலந்து, பொருள் உணர்ந்து, கருத்தறிந்து படிக்க வேண்டும். அப்போது தான் படித்தது மனதில் தங்கும்.

6. விடை எழுதும் போது இயன்ற வரை தெளிவான கையெழுத்தில் எழுத வேண்டும். விடையைப் பத்தி பத்தியாக, பொருத்தமான உட்தலைப்புக்கள் இட்டு, சிறுசிறு வாக்கியங்களில் தர வேண்டும். தேவைப்படும் இடங்களில் அடிக்கோடு இடுவது விடைத்தாளைத் திருத்துகின்ற ஆசிரியர்களின் கவனத்தை ஈர்க்கும்.

7. மூன்று, நான்கு பேர் என மாணவ மாணவியர் ஓர் இடத்தில் ஒன்று சேர்ந்து படிப்பது பல வகைகளிலும் நன்மை விளைவிக்கும். ஒருவருக்கு ஒருவர் பாடங்கள் தொடர்பான கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும், பாடங்களில் எழும் ஐயங்கள் நீங்கித் தெளிவு பெறுவதற்கும் இக்கூட்டுக் கல்வி முறை வழிவகுக்கும்.

8. வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்த, மாணவர்கள் கேட்பது ஒரு முறை. இதற்கு மாறாக, இன்னும் ஒரு படி மேலாக, மாணவர்களே சுழற்சி முறையில் ஆசிரியராக இருந்து, பிற மாணவர்களுக்குக் கற்றுத் தரும் வழக்கத்தினை அவ்வப்போது மேற்கொண்டு வந்தால், மாணவர்களின் அறிவாற்றலும் புரிதல் திறனும் மேம்படும்.

9. மாணவர்கள் முயற்சி செய்வதோடு மட்டும் நின்று விடாமல், நாள்தோறும் இடைவிடாமல் பயிற்சி செய்வோராகவும் விளங்க வேண்டும். முயற்சியும் பயிற்சியும் ஒன்று சேரும் போது தான் முழுப்பயன் கிட்டும். படிக்கும் போது மட்டுமின்றி, கிடைக்கின்ற சிறுசிறு ஓய்வு நேரங்களில் எல்லாம் படித்தவற்றை மனத்தில் அசை போட்டுப் பார்த்தல் நன்று.

10. நிறைவாக, நறுக்குத் தறித்தாற் போல் நான் வலியுறுத்த விரும்பும் நான்கே நான்கு சொற்கள் இவை தாம்: ‘விழி எழு உணர் ஒளிர்!’

‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்ற வள்ளுவர் வாக்கினைக் குறிக்கோளாகக் கொண்டு, அதை நிறைவேற்றும் முயற்சியில் திட்டமிட்டு உழைத்தால், மாணவச் செல்வங்களே, வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்; அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உங்கள் கடுமையான உழைப்பையே சாரும்.
Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்
அருமருந்து