கதம்பம்
நாய்க்குட்டிகள்

பொய்க்காத ஜோதிடம்!

Published On 2022-04-04 15:16 IST   |   Update On 2022-04-04 15:16:00 IST
திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோயில் எனும் ஊரில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் ராமானுஜ ஆச்சாரியார் எனும் ஜோதிடர். அப்போது அந்தப்பகுதியில் அவர் ஒரு பெரிய ஜோதிடராக போற்றப்பட்டார்.
அவரின் ஜோதிட அறிவை  சோதிப்பதற்காக ஊர்க்காடு ஜமீன்தார் அவரை அழைத்து, “உங்களை ஜோதிட வல்லவர் என்று மக்கள் புகழ்கிறார்கள். அதை நான் சோதிக்க விரும்புகிறேன். நமது ஜமீனில் வளரும் இந்த நாய் எத்தனை குட்டிகள் போடும் என்று சரியாகக் கணித்துக் கூறிவிட்டால் நான் உங்களுக்கு ஆண்டிற்கு 12 கோட்டை நெல்  அளிக்கிறேன். அதை நான் செப்புபட்டயத்தில் எழுதித்தருகிறேன். நீங்களும் இந்த நாய் எத்தனைக் குட்டிகள் போடும்  என்று செப்புப்பட்டயத்தில் பதிவு செய்து தாருங்கள்! உங்கள் ஜோதிட அறிவு எத்தனை வலிமையானது என்று பார்த்துவிடுவோம்” என்று கூறினார்.

ராமானுஜ ஆச்சாரியார் இந்த சவாலை ஒப்புக்கொண்டார்.  இரண்டு செப்புப்பட்டயங்களும் எழுதி பரிமாறப்பட்டுவிட்டது. ராமானுஜ ஆச்சாரியார் தனது செப்பேட்டில், “ஜமீன் நாய் 6 குட்டிகள் போடும். அதில் ஒரு குட்டியை நாயே சாப்பிட்டுவிடும். மீதி 5 குட்டிகளில் 2 பெண், 3ஆண். அவைகளில் ஆண் குட்டிகள் கருப்பு வெள்ளை  நிறத்திலும், பெண் குட்டிகள் மாநிறத்திலும் இருக்கும்” என்று எழுதிக்கொடுத்தார்.

இது  மக்கள் பலர் முன்னிலையில் நடந்தது. சில மாதங்கள் கழித்து ஜமீன் நாயும் கருவுற்று குட்டிகள் ஈன்றது. அதிசயமாக ராமானுஜ ஆச்சாரி  ஜோதிடர் கூறியபடியே அனைத்தும் நடந்தது. 6 குட்டிகளில் 5 மட்டும் பிழைத்தது.  நிறமும் ஜோதிடர் கூறியபடியே அமைந்தது. மக்கள் அனைவரும் அதிசயமடைந்தனர்.

ஆனால் ஜமீன்தார் எரிச்சலானார். அவரே தோற்று விட்டதுபோல் வேதனை அடைந்தார். எனவே செப்பேட்டில் கூறியபடி வருடத்திற்கு 12 கோட்டை நெல்லைத்தர மறுத்துவிட்டார். விடாத ஜோதிடர் ராமானுஜ ஆச்சாரியார் இந்த வழக்கை அப்போதைய திருநெல்வேலி ஆங்கில கலெக்டரிடம் கொண்டு போனார். சாட்சியாக இரு செப்பேடுகளும் இருந்தது.

கலெக்டர் இருதரப்பையும் கூப்பிட்டு விசாரித்து பின்பு ராமானுஜ ஆச்சாரியாருக்கு ஆண்டிற்கு 12 கோட்டை நெல் ஜமீன்தார் தரவேண்டும் என்று ஆணையிட்டார். வேறு வழி இல்லாது ஜமீன்தாரும் கொடுக்க ஒப்புக்கொண்டார். இந்த ஆணைப்படி  ராமானுஜ ஆச்சாரியார் மட்டும் இன்றி அவர் வழி வந்த ஸ்ரீ மணவாள முனிவரின்  பாலூராள் கோமடத்தை சேர்ந்த திருவேணிசம்மத்தார் 12 கோட்டை நெல் பெற்று வந்ததாகத் தெரிகிறது.

-கோதனம் உத்திராடம்

Similar News