கதம்பம்
கோப்புப்படம்

எமனிடமிருந்து தப்பிக்க யமனாகா...

Published On 2022-03-19 15:59 IST   |   Update On 2022-03-19 15:59:00 IST
முதுமையை அடித்துவிரட்ட வியப்பூட்டும் மருந்து வழிமுறைகள் நமக்குக் கிடைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை எனத் தெரிகிறது.
ஒரு 80 வயதான ஒருவரை 40 வயதானவராக மாற்றமுடிந்தால் எப்படி இருக்கும்?

சமீபத்திய ஆராய்ச்சி இளமையை மீட்டெடுப்பது சாத்தியம் எனக் கண்டறிந்துள்ளது.  

சால்க் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் வயதாவதைத் தடுக்க மற்றும் வயதை வெற்றிகரமாகக் குறைக்க வழி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். சால்க் நிறுவனம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் டியகோ என்ற நகரத்தில் உள்ளது.

இது எப்படிச் சாத்தியமானது என புரிந்துக்கொள்ள ஸ்டெம் செல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நம் உடலில் ஸ்டெம் செல் என்ற ஒரு வகை செல்கள் உள்ளன. உதாரணமாக, நம் இரத்தத்தில் சுமார் 16 வகையான செல்கள் உள்ளன. அவை அனைத்தையும் உருவாக்குவது கெமட்டோபாயடிக் ஸ்டெம் செல் ஆகும். அதாவது இந்த  ஸ்டெம் செல்கள் உருமாற்றம் அடைந்து பல வகையான செல்களை உருவாக்கவல்லது. ஆனால் இந்த ஸ்டெம் செல்களை உடலிலிருந்து அல்லது வளரும் கருவிலிருந்து பிரித்தெடுப்பது அவ்வளவு எளிதல்ல.  

ஜப்பானில் சின்யா யமனாகா என்ற ஒரு விஞ்ஞானி இருந்தார். இவர் ஒரு செல்லை Oct 4,  Sox2, KIf4, c-Myc என்ற நான்கு புரதங்களை  உற்பத்தி செய்யவைத்தால் அந்த செல் ஸ்டெம் செல்லாக மாறிவிடும் எனக்கண்டறிந்தார். அதாவது இந்த முறையில் செயற்கையாக எந்த ஒரு செல்லையும் ஸ்டெம் செல்லாக மாற்றமுடியும். இந்த கண்டுபிடிப்பால் ஸ்டெம் செல்கள் துறை புத்துயிர் பெற்றது மற்றும் வேகமாக வளர்ந்தது. இந்த கண்டுபிடிப்பு பல நோய்களைக் குணமாக்கப் பயன்படும். இந்த கண்டுபிடிப்பு யமனாகாவிற்கு 2012ல் நோபல் பரிசை பெற்றுத்தந்தது.  

Oct 4,  Sox2, KIf4, Myc என்ற நான்கு புரதங்களை யமனாகா கலவை என அழைக்கப்படுகிறது. சால்க் நிறுவன  ஆராய்ச்சியாளர்கள் இந்த யமனாகா கலவையை நம் எண்பது வயதை ஒத்த சுண்டெலியின் உடலில்  ஏற்றினார்கள். பல வாரங்கள்  இவ்வாறு யமனாகா கலவையைச்  சுண்டெலிக்கு ஏற்றினார்கள்.  இதன் விளைவாக அந்த சுண்டெலிகள் சுமார்  நம் 40 வயதை ஒத்த உடல்நிலையை அடைந்திருக்கிறது.
 
ஆமாங்க... வயதான சுண்டெலியை நடுத்தர வயதானதாக மாற்றியுள்ளார்.  அதாவது  யமனாகா கலவையைச்  சுண்டெலிக்கு ஏற்றும்போது அதன் உடலில் ஸ்டெம் செல்கள் அதிகரிக்கின்றது. அதனால்தான்  சுண்டெலியின்  வயது குறைகிறது.

ஆக, யமனாகா கலவையை உடலில் செலுத்திக் கொண்டால்  வயது குறைகிறது என அறியப்பட்டுள்ளது. மேலும்  யமனாகா கலவையை உடலில் செலுத்திக் கொண்டால் புற்றுநோய்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என நம்பப்பட்டது. ஆனால் அப்படி புற்றுநோய் எதுவும் இந்தக் கலவை செலுத்தப்படச் சுண்டெலிக்கு வரவில்லை. இதனால் இந்த மருத்துவத்துறை பாதுகாப்பானது எனத் தெரிகிறது.

சுண்டெலியில் செய்து காட்டப்பட்டுள்ள இந்த சாதனை மருத்துவ வழிமுறை மனிதனுக்குத் தகுந்தாற்போல மாற்றி அமைக்கப்பட வேண்டியதுதான் பாக்கி. ஆக...  எமனிடம் இருந்து தப்பிக்க எமனாகா  கலவைப் பயன்பட போகிறது.

முதுமையை  அடித்துவிரட்ட வியப்பூட்டும் மருந்து வழிமுறைகள் நமக்குக் கிடைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை எனத் தெரிகிறது.  

-பேராசிரியர் சி. சுதாகர்

Similar News