கதம்பம்
கண்

கண்களை காக்கும் 20

Published On 2022-03-18 16:02 IST   |   Update On 2022-03-18 16:02:00 IST
கண்களில் தொடர்ச்சியாக சுரப்பிகள் வேலை செய்துகொண்டு, ஈரப்பதத்துடன் இருந்தால் தான், கண்களும் பாதுகாப்பாக இருப்பதுடன், பார்வைக்குறைபாடுகளும் ஏற்படாது.
கண்களில் ஈரப்பதம் இல்லாமல் வறட்சி ஏற்படுவதற்கு அதிக நேரம் வேலை கொடுத்துக் கொண்டிருப்பதும், முதுமையும், சில நோய்களும் தான் என்பது மாறிப்போய், தொடர்ச்சியாக கம்ப்யூட்டரும், செல்போனும் பார்த்துக் கொண்டிருப்பது என்பதில் வந்து நிற்கிறது.

புத்தகங்களைப் படித்து, கையால் எழுதிப் பழகியவர்களும், தற்போதைய உலகத்தில் அதிக..மிக அதிகமாவே  ஒரு நாளில் ஆறு, ஏழு மணி நேரங்கள் கூட கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கும் நிலை வந்துவிட்டது.

இதனால், வயது வித்தியாசம் இல்லாமல், அனைவருக்கும் இந்த கண் வறட்சி, தலைவலி, மங்கலான பார்வை ஏற்படுகிறது. இவற்றை ஓரளவிற்கு தவிர்ப்பதற்கு 20-20-20 கட்டளையைப் பின்பற்றலாம். தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் படித்து அல்லது ஒளித்திரையைப் பார்த்துவிட்டு, 20 அடி தூரத்திற்கு கண்களின் பார்வையைத் திருப்பி, 20 நொடிகள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த காட்சிகள் இயற்கைக் காட்சிகளாக, பசுமையான மரங்கள், செடி, கொடிகள், அல்லது பச்சை வண்ணம் என்றிருக்கலாம்.

இவற்றுடன் சேர்த்து இன்னொரு 20 நொடிகளை நான் பரிந்துரைக்கிறேன். அந்த 20 நொடிகள் சாதாரணமாக கண்களை மூடி வையுங்கள். ஈரப்பதத்தை  தக்கவைக்க உதவிடும். மேலும், தொடர்ச்சியாக படிப்பதால், கண்களை மூடித் திறந்து, கண் சிமிட்டுவதையே மறந்து விடுகிறோம். இதனாலும் ஈரப்பதம் குறைகிறது.

ஈரப்பதம் ஏன் அவசியம் என்றால் நீர் சுரப்பிகளில் இருந்து வெளிப்படும் கண்ணீர், கரு விழி, வெண்விழி இரண்டையும் கழுவி சுத்தமாக வைத்திருப்பதுடன், கிருமித் தொற்றுகளில் இருந்தும் காக்கிறது. ஆறு விதமான தசைகளால் தான் கண்கள் அனைத்துப் பக்கமும் சுற்றி வருகிறது என்பதாலும், கண்களுக்கான ஆக்சிஜனை இந்த நீரே கொடுக்கிறது என்பதாலும், ஈரப்பதம் மிக அவசியம்.

ஆகையால், கண்களில் தொடர்ச்சியாக சுரப்பிகள் வேலை செய்துகொண்டு, ஈரப்பதத்துடன் இருந்தால் தான், கண்களும் பாதுகாப்பாக இருப்பதுடன், பார்வைக் குறைபாடுகளும் ஏற்படாது. இவற்றால் ஏற்படும் தலைவலி, கண்வலி, கழுத்துவலி, மன அழுத்தம் போன்றவற்றையும் தவிர்க்கலாம்.

- வண்டார் குழலி

Similar News