கதம்பம்
தூக்கம்

நாம் தூங்கும்போது விடியவிடிய வேலை செய்யும் உறுப்பு... எது தெரியுமா?

Published On 2022-03-02 16:31 IST   |   Update On 2022-03-02 16:31:00 IST
தூங்குவதில் வேறென்ன விஷயங்கள் இருக்கின்றன? நாம் தூங்கி விழிக்கும் போதுதான் அத்தூக்கம் முழுமையானதாக இருந்ததா, இல்லையா என்பதை நாம் உணர முடியும்.
நாம் உண்ணும் உணவுகளில், நாம் அருந்தும் தண்ணீரில்... இன்னும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஏராளமான பொருட்களில், உடலிற்கு ஒவ்வாத ரசாயனங்கள் நிறைய உள்ளன. இவற்றை அகற்றும் மிக முக்கியமான வேலையை நம் கல்லீரல் செய்கிறது.

நச்சுகளை அகற்றும் இந்த வேலையை, பகலின் அன்றாட வேலைகளுக்கிடையில் செய்யாமல் இரவில் செய்கிறது கல்லீரல். இரவு 11 மணிக்குத் துவங்கி, அதிகாலை 3 மணி வரையில் நச்சுத்தன்மை அகற்றும் பணி நீடிக்கிறது.

இந்த வேலையை பகலில் செய்ய முடியாது. ஏனென்றால், பகலில் நாம் உண்ணும் உணவுகளை ஜீரணிப்பது முதல் பலவகையான வேலைகள் இருந்து கொண்டேயிருக்கின்றன. இரவின் குளிர்ச்சியும் சூழலும் கல்லீரலின் இந்த இயக்கத்திற்கு அவசியம். இரவுச் சூழலில், நச்சுகளை அகற்றி செல்களுக்குப் புத்துயிர் அளிக்கிறது நம் கல்லீரல்.

மரங்கள், செடிகள் வளர்வதையும், நம் குழந்தைகள் வளர்வதையும் நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? உயிருள்ள ஒவ்வொரு அணுவும் பகலைவிட இரவுகளில்தான் வளர்ச்சி அடைகிறது. தன்னைத்தானே பராமரித்துக் கொள்கிறது.

பகலில் நடக்கும் மாற்றங்களைவிட, இரவுச் சூழலில் மிக அதிகமான மாற்றங்களை ஒவ்வொரு உயிரணும் சந்திக்கிறது. இச்சிறப்புத் தன்மை வாய்ந்த இரவுகளில் தூங்குகிறவர்களுக்குத்தான் மேற்கண்ட வளர்ச்சிக்கான மாற்றங்களும், நச்சுத்தன்மை அகற்றமும் முழுமையாக நடைபெறுகின்றன. எனவே இரவில் தூங்குவது என்பது அத்தியாவசியமான உடல் நடவடிக்கை. அதற்கு மாற்று கிடையாது.

தூங்குவதில் வேறென்ன விஷயங்கள் இருக்கின்றன? நாம் தூங்கி விழிக்கும் போதுதான் அத்தூக்கம் முழுமையானதாக இருந்ததா, இல்லையா என்பதை நாம் உணர முடியும்.

எழும்போது உடல் கனமாகவும் சோர்வுற்றும் இருந்தால், உடலின் இரவுப் பணிகள் இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என்பதைக் குறிக்கிறது. எழும்போது சுறுசுறுப்பாகவும், அன்றைய புதிய விடியலில் நாம் செய்யப்போகிற வேலைகள் பற்றிய சிந்தனைகளோடும் இருப்பது நல்ல தூக்கத்தின் அடையாளம்.

தூக்கத்திற்கும் பசிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. சரியான தூக்கம் இல்லாதபோது பசியின் தன்மை மாறுபடும். சரியான உணவு முறையில்லாத போது முழுமையான தூக்கம் இருக்காது.

பசியையும் தூக்கத்தையும் சரியாகப் பின்பற்றுவது ஆரோக்கியத்தின் அடிப்படையாகும். இரவில் நாம் தூங்கச் செல்லும் போது வயிற்றில் செரிக்கும் வேலை இருக்கக்கூடாது. அப்போதுதான் கல்லீரலின் பணி முழுமையாக இருக்கும். உடலின் ஒட்டுமொத்த சக்தியும் பராமரிப்பு வேலையைச் செய்யும்.

அதனால், இரவு உணவை எட்டு மணியளவில் எளிதாக ஜீரணிக்கக்கூடிய வகையில் வைத்துக் கொள்வது தூக்கத்திற்கும், அதன் பணிகளுக்கும் துணையாக இருக்கும்.

உடலின் அடிப்படைத் தேவைகளான பசி, தாகம், ஓய்வு, தூக்கம், போன்றவற்றைக் கவனித்து, அவற்றை நிறைவு செய்வோமானால் முழு ஆரோக்கியத்தை நாம் நிலைப்படுத்திக் கொள்ள முடியும்.

-அ.உமர் பாரூக்

Similar News