கதம்பம்
தாய் மற்றும் குழந்தை

இதயத் தாமரை மலரவேண்டும்

Published On 2022-02-05 15:23 IST   |   Update On 2022-02-05 15:23:00 IST
இறைவனை வெறுத்தாலும், இகழ்ந்தாலும், வணங்கா விட்டாலும் அவன் அருள் செய்வான், ஒரு தாயைப் போல என்கிறார் மணிவாசகர்.
நமது உடலில் இரண்டு தாமரை மலர்கள் உண்டு. ஒன்று மலரும் போது  மற்றது கூம்பும்.

நமது கைகள் ஒரு மலர். நம் இதயம் இன்னொரு மலர்.

இரண்டு கைகளையும் சேர்த்து, குவித்து வைத்தால் தாமரை மொட்டு போல இருக்கும். அப்படி உள்ளன்போடு வணங்கும் போது, இதயமாகிய உள்ளத் தாமரை மலரும்.

அதற்கு மாறாக, எனக்கு வேண்டும், எனக்கு வேண்டும் என்று இரண்டு கைகளையும் விரித்து பிச்சை ஏற்பவனின் உள்ளத் தாமரை கூம்பும்.

தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது சோற்றை கை நுனிக்கு கொண்டு வந்து, மலர் மொட்டு போல கூம்பி, குழந்தையின் வாயில் தருவார்கள். அந்தத் தாயிடம் கேட்டுப் பாருங்கள், அந்த நொடியில் அவர்கள் மனம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று.

மணிவாசகர் சொல்கிறார்... “கர மலர் மொட்டித்து, இருதயம் மலர..” என்று. அதாவது கரமாகிய மலர் மொட்டுப் போல ஆகி, இருதய தாமரை மலர என்கிறார்.

இறைவன் தனக்குத் தந்த நன்மைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கிறார். பதிலுக்கு தான் ஒன்றுமே செய்யவில்லையே என்று வருந்துகிறார். ஒரு பக்கம் நன்றியில் மனம் நெகிழ்கிறது. மறுபுறம், தான் ஒன்றுமே செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம் வருந்தி “தாயே ஆகி வளர்த்தனை போற்றி” என இறைவன் தாய் போல கருணை செய்வான் என்கிறார் மணிவாசகர்.

அது ஏன் தாய் போல என்றார்.  தாயன்பு உயர்ந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தும், ஏன் அது உயர்ந்தது என்று சிந்திப்போமா?

முதலாவது, நமக்கு யாராவது துன்பம் செய்தால், அவர்களுக்கு திருப்பி துன்பம் செய்ய வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு. திரும்பிச் செய்ய முடியாவிட்டாலும், அவர்களுக்கு ஒரு கெடுதல் வர வேண்டும் என்று உள்ளத்திலாவது நினைப்பது இயல்பு.

பத்து மாதம், படாதபாடு படுத்திய குழந்தை, சொல்லொண்ணா வலி கொடுத்து பிறந்த குழந்தையை கண்டு ஒரு தாய் மகிழ்வாள். அந்த குழந்தையின் மேல் கோபம் கொள்ளமாட்டாள். முடியுமா?

இரண்டாவது, ஒரு பெண் எப்போதும் அழகாக இருக்க விரும்புவாள். அவளுடைய அழகை சிதைத்தால் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது. ஒரு பெண் அறியாமல், அவளுடைய கூந்தலை வெட்டி விட்டால் அவள் அடையும் துன்பத்திற்கும்  கோபத்திற்கும் அளவு இருக்காது.

ஆனால், ஒரு பிள்ளை பெறுவது என்றால் ஒரு பெண்ணின் அழகு குன்றும். வயிற்றில் வரி வரியாக தோல் சுருங்கும். உடலின் கட்டு குலையும்.

இருந்தும் அந்தப் பிள்ளையை தாய் பாராட்டி சீராட்டி வளர்ப்பாள்.

மூன்றாவது, கருவில் இருக்கும் பிள்ளை எப்படி இருக்கும் என்று கூட தாய்க்கு தெரியாது. ஆணா பெண்ணா என்று கூட தெரியாது. கறுப்பா  சிவப்பா, ஒல்லியா குண்டா என்று ஒன்றும் தெரியாது. முகம் கூட தெரியாத அந்த சிசுவின் மேல் அவ்வளவு அன்பு பாராட்டி தன்னுள் வளர்ப்பாள்.

குழந்தைக்கு வேண்டுமே என்று  காலாகாலத்தில் உணவு உண்பாள். குழந்தைக்கு வலிக்கும் என்று ஒரு விதமாக படுப்பாள். அவ்வளவு வலியையும் சகித்துக் கொள்வாள்.

அது போல இறைவனை வெறுத்தாலும், இகழ்ந்தாலும், வணங்கா விட்டாலும் அவன் அருள் செய்வான், ஒரு தாயைப் போல என்கிறார் மணிவாசகர்.

குழந்தைக்குத் தெரியாது தாய் தனக்கு எவ்வளவு உதவி செய்கிறாள் என்று. வயிற்றில் எட்டி உதைக்கும். அதையும் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வாள் ஒரு தாய். அந்த கருணையை நினைத்து உருகுகிறார் மணிவாசகர் பெருமான்.

-சிவவாசகன் மோகன் ராஜ்

Similar News