கதம்பம்
கோயில்

காணவேண்டிய கலைப் பொக்கிசம்

Published On 2022-01-31 15:13 IST   |   Update On 2022-01-31 15:13:00 IST
ஒரு காலகட்டத்தில் இவர்கள் ஆண்ட நிலப்பரப்பு சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட நிலப்பரப்பைவிட பெரியது என்று பார்க்கும் போது அவர்களது ஆற்றல் நமக்குப் புரிகிறது.

பெங்களூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் இந்த பேளூர் செல்ல வேண்டுமென்று பலமுறை நினைத்ததுண்டு.

ஹசன் மாவட்டத்தில் உள்ள இந்த பேளூர் பெங்களூருவில் இருந்து வடமேற்கில் 200 கி. மீ. தான்!



தமிழகத்து மூவேந்தர்கள் போல கர்நாடகம், ஆந்திரம்,  மகாராட்டிரம், குடகு பகுதிகளை ஆண்டவர்கள் சாளுக்கியர்கள்,  ஹொய்சாலர்கள், விஜயநகரப் பேரரசின் மன்னர்கள்.  ஒரே காலகட்டத்தில் அல்ல; ஒருவர் பின் ஒருவராக!

மேற்குப் பகுதியை ஆண்டவர்கள் மேலைச் சாளுக்கியர்கள் என்றும், கிழக்குப் பகுதியை ஆண்டவர்கள் கீழைச் சாளுக்கியர்கள் என்றும் நாம் படித்திருக்கிறோம். ஒரு காலகட்டத்தில் இவர்கள் ஆண்ட நிலப்பரப்பு சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட நிலப்பரப்பைவிட பெரியது என்று பார்க்கும் போது அவர்களது ஆற்றல் நமக்குப் புரிகிறது.



சாளுக்கியர்கள் காலத்துக்குப் பின்னர் வந்தவர்கள் ஹொய்சாலர்கள்.  இந்த மரபில் வந்த விஷ்ணுவர்த்தன் கி. பி. 1110 ல் அரியணை ஏறினான். அவன் அரியணை ஏறிய ஏழாம் ஆண்டு இந்த சென்ன கேசவன் ஆலயம் கட்டடப் பணி தொடங்கியது.

விஷ்ணுவர்தன் 1140ல் காலமான பிறகு, அவன் வாரிசுகள் தொடர்ந்தார்கள். பணி நிறைவடைய கிட்டத்தட்ட 103 ஆண்டுகள் ஆனது! மூன்று தலைமுறை! இங்கே நாம் காணும் சிற்பங்களுக்கு ஈடாக வேறெங்கும் காண முடியுமா என்று தெரியவில்லை.

தாராசுரம் கோயில் சிற்பங்களை இதற்கு இணையாக நாம் கருதலாம் என்றாலும், அளவிலும் அழகிலும் இந்தக் கோயில் உயர்ந்தே நிற்கிறது!



எடுத்துக் காட்டாக, நுட்பமானச் சிற்பங்கள் அமைந்த தூண் பால் பேரிங் போன்ற ஒன்றால் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்தத் தூணை நாம் சுழற்ற முடியும்! ஒவ்வொன்றையும் பெரிதாக்கிப் பாருங்கள்!

வியப்பில் பிளந்த வாயை மூட முடியாமல் நிற்கிறோம்!

மொத்தத்தில் சாளுக்கியர்களின் தலை சிறந்த கலைப்படைப்பு இது! ‘

சென்ன’ என்ற சொல்லுக்கு ‘ அழகிய ‘ என்று பொருள்.

ஹேமாவதி ஆற்றின் துணையாறான யாகாச்சி கரையில் அமைந்துள்ளது பேளூர்!

வாழ்நாளில் ஒரு முறையாவது கண்டு மகிழ வேண்டிய கலைக் கருவூலம்! தமிழையாண்ட கோதை ஆண்டாளுக்கு தனி சன்னதி அல்ல; தனியாக கோயிலே இருப்பது நம்மை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கிறது!
எல்லாம் உடையவர் இராமானுசர் தொடர்பினால் வந்திருக்கிறது!

கேசவப் பெருமாள் இறைவனாக வீற்றிருப்பதால் இது வைணவக் கோயில்தான். ஆனால் சைவ, சமண, பௌத்த சமயங்களைச் சார்ந்த கடவுளரின் சிற்பங்களும் இங்கே இடம் பெற்றுள்ளன என்பது மிகச் சிறப்பான ஒன்று! வரலாற்றைச் சொல்ல பல பக்கங்கள் வேண்டும். நான் குறித்தவை  மிகக் குறைவே. போய் வாருங்கள்!- மா. பாரதிமுத்துநாயகம் —

Similar News