செய்திகள்
எஸ்.சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்ய கோரி போலீஸ் நிலையத்தில் முன்னாள் கவுன்சிலர் ஆஜர்

Published On 2018-07-07 10:48 IST   |   Update On 2018-07-07 10:48:00 IST
ஜெயலலிதா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்த அமைச்சர் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வேடசந்தூர் போலீசில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். #DindugalSrinivasan

வேடசந்தூர்:

மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளராக இருப்பவர் ராஜா எஸ்.சீனிவாசன். இவர் மதுரை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரும் ஆவார். கடந்த மாதம் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருநதார்.

வேடசந்தூரில் கடந்த 19.6.2018-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது கொள்ளையடித்த பணத்தைதான் டி.டி.வி. தினகரன் மூலம் பெற்றுக் கொண்டு அந்த பணத்தால் வெற்றி பெற்ற 18 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து வருகிறார்கள் என பேசினார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பெருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் திண்டுக்கல சீனிவாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்றம் தலையிட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.


வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார் வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வழக்கு பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். அதன்படி ராஜா எஸ்.சீனிவாசன் தனது வக்கீலுடன் வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு தனி அறையில் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் வீரகாந்தி ஆகியோர் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த வாக்குமூலம் அனைத்தும் வீடியோ கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

மேலும் வெள்ளை பேப்பரிலும் டைப் செய்து புகார் மனு வாங்கப்பட்டு ராஜா எஸ்.சீனிவாசனிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அமைச்சர் மீது புகார் தெரிவிக்க வந்ததால் பொதுமக்கள் யாரையும் 3 மணி நேரம் போலீஸ் நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லை. வேறு யாரிடமும் புகார் வாங்கவும் இல்லை.

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தேன். என்னிடம் நாளிதழ்களில் வந்த செய்தி மட்டுமே ஆதாரமாக உள்ளது. வீடியோ ஆதாரம் இல்லை. எனவே எனது புகார் மீது வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு வழக்கு பதிவு செய்யாவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தில் புகார் அளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் வீரகாந்தி கூறுகையில், ராஜா எஸ்.சீனிவாசன் அளித்த புகார் மீது விசாரணை நடத்தப்படும். அது குறித்த விபரங்களை அறிக்கையாக ஐகோர்ட்டில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றார். #DindugalSrinivasan

Tags:    

Similar News