செய்திகள்

எடப்பாடி பழனிச்சாமிக்கு கேன்களில் தண்ணீர் கொடுக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும் - தினகரன்

Published On 2018-04-28 18:10 IST   |   Update On 2018-04-28 18:10:00 IST
எடப்பாடியால் சேலத்தில் இருந்து கேன்களை கொண்டு சென்று தான் கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கொண்டு வர முடியும் என்று டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டி உள்ளார். #Dinakaran #EdappadiPalaniswami #Cauveryissue

மயிலாடுதுறை:

காவிரி மேலாண்மை வரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மாநில அரசை கண்டித்தும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை சின்ன கடைவீதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் தினகரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக 2 வார கால அவகாசம் கேட்டுள்ளது. அதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் லோக்சபா தேர்தல் வரையிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு இழுத்தடிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

நடைபயணம் சென்று விட்டோம் என்று ஓய்வெடுத்து கொண்டிருக்கும் கட்சிக்காரர்களும் காவிரிக்காக தொடர்ந்து போராட வலியுறுத்த வேண்டும்.

திவாகரனிடம் நான் ஆலோசனை கேட்க வில்லை என்று தான் அவர் வாய்க்கு வந்ததை எல்லாம் கூறிகொண்டு இருக்கிறார்.அவருக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஓய்வு எடுத்தால் நல்லது. பாரதிராஜா, சங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களை விட சிறந்த இயக்குனர் மன்னார்குடியில் தான் உள்ளார். என்னை விட எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் நல்லவர்கள் என்று கூறுவது காமெடியாக உள்ளது.

நமது காவிரி நீரை எடப்பாடியால் தான் கொண்டு வர முடியும் என்று அமைச்சர்கள் பேசுகிறார்கள். எடப்பாடியால் சேலத்தில் இருந்து கேன்களை கொண்டு சென்று தான் கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கொண்டு வர முடியும். வேறு எதுவும் முடியாது.

திருவாரூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு வரும் எடப்பாடிக்கு அ.ம.மு.க. பொறுப்பாளர்கள் கேன்களில் தண்ணீர் கொண்டு கொடுக்கும் போராட்டத்தை நடத்த வேண்டும். எடப்பாடியையும், ஓ.பி.எஸ்.சையும் தமிழக மக்கள் விரும்ப வில்லை. ஆளும் கட்சியினர் உளவுத் துறையை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால் மீண்டும் நாம் ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி: ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பு குறித்து என்ன கூறுகிறீர்கள்.

பதில்: ஓ.பன்னீர்செல்வம் பதவி பறிக்கப்பட்டு இருந்தால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார். #Dinakaran #EdappadiPalaniswami #Cauveryissue

Similar News