செய்திகள்

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடிப்போம்- வைகோ

Published On 2018-03-03 15:17 IST   |   Update On 2018-03-03 15:17:00 IST
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடிப்போம் என்று கடலூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #Vaiko
கடலூர்:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று கடலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டுக்கு தற்போது சோதனை காலம் ஏற்பட்டுள்ளது. காவிரி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு முன்பைவிட தற்போது குறைவான டி.எம்.சி. தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரத்தில் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். ஆனால், பிரதமர் இதுவரை பதில் கூறவில்லை.


கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்துக்கு குறைந்த அளவு டி.எம்.சி. தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுபோல் நான் பேசியதற்கு என் மீது வழக்கு தொடர்ந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன்.

ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மத்திய மந்திரி நிதின்கட்காரியும் பேசி உள்ளார். அவர் மீது வழக்கு தொடரப்படுமா? பிரதமரின் ஊதுகுழலாகதான் நிதின்கட்காரி உள்ளார்.

பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் சம்பந்தமாக இதுவரை ஏன் சந்திக்கவில்லை. வருகிற 7-ந்தேதி கர்நாடகாவில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் சம்பந்தமாக பிரதமரை சந்திக்க போகிறோம் என தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. அப்போது மத்திய அரசு இரு மாநிலத்திலும் பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது எனக்கூறி யாரையும் சந்திக்க மாட்டார்கள். இதனை பார்க்கும்போது ஒருமைப்பாட்டுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுகிறார்.

பிரதமர் மோடி உள்நாட்டு அரசியல் குறித்து வெளிநாட்டிலும், புதுவையில் பேசி வருகிறார். இதில் காங்கிரசை அழிப்பேன் என பேசி வருகிறார். இதனை பார்க்கும் போது ஆர்.எஸ்.எஸ். குரலாகதான் பிரதமரின் குரல் உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து அனைத்துக்கட்சி மற்றும் விவசாய தலைவர்கள் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். இதனை உதாசீனம் செய்தால் வருகிற 6-ந் தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்குழுவில் இந்த பிரச்சனை குறித்து ம.தி.மு.க. சார்பில் சரியான முடிவு எடுக்க தீர்மானம் போட உள்ளோம்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவில் பாரதிய ஜனதாவை தோற்கடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் ராம லிங்கம், நகர செயலாளர் ராமசாமி ஆகியோர் உடனிருந்தனர். #Tamilnews

Similar News