செய்திகள்

பஸ் கட்டண உயர்வுக்கு தி.மு.க.வே காரணம்: எடப்பாடி பழனிசாமி

Published On 2018-01-29 07:46 GMT   |   Update On 2018-01-29 07:46 GMT
பஸ் கட்டண உயர்வுக்கு தி.மு.க.வே. காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #BusFareHike
சென்னை:

அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு போக்குவரத்து கழகம் இந்த அளவுக்கு நஷ்டத்தில் இயங்குவதற்கு தி.மு.க.தான் காரணம். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது போக்குவரத்தின் கடன் சுமையாக ரூ.3392.15 கோடியை வைத்து சென்றனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகை ரூ.926 கோடியை பாக்கியாக வைத்து சென்றார்கள்.

போக்குவரத்து கழகங்களின் சொத்துக்களை அடமானம் வைத்தனர். இதனால் போக்குவரத்து கழகத்தை நடத்துவதில் இந்த அரசுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. கடந்த 6 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

தி.மு.க. ஆட்சி காலத்தில் 1 லிட்டர் டீசலின் விலை ரு.43 ரூபாய் 10 காசு. தற்போது டீசலின் விலை 67 ரூபாய் 23 காசு. அதாவது ஒரு லிட்டருக்கு 23 ரூபாய் 13 காசு உயர்ந்துள்ளது. 6 ஆண்டுகளில் புதிய பஸ்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. உதிரிப்பாகங்கள் விலையும் அதே அளவில் உயர்ந்திருக்கிறது.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு மாற்றி அமைப்பதன் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளம் உயருகிறது. 2011 மார்ச் மாதத்தில் ரூ.252.38 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது. ஆனால் தற்போது சம்பளமாக ரூ.492.16 கோடி வழங்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு ரூ.240.15 கோடி கூடுதல் செலவாகிறது.

சம்பளம் மட்டும் 90 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில்தான் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து கழகத்துக்கு ரூ.545 கோடி இழப்பு ஏற்படுகிறது. அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைவாக உள்ளது. மேலும் தமிழகத்தில்தான் அதிகமாக 22 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

சம்பள உயர்வு, டீசல் விலை உயர்வு காரணமாக தவிர்க்க முடியாத நிலையில் தான் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் குறைந்த அளவில்தான் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் போக்குவரத்து கழகத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12 கோடி இழப்பு ஏற்படுகிறது. உயர்த்தப்பட்ட கட்டணம் மூலம் இந்த இழப்பு ரூ.4 கோடியாக குறைந்துள்ளது.

முடிந்த அளவுக்கு கட்டணத்தை குறைத்துள்ளோம். ஆனால் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே போராட்டங்களை நடத்தி வருகின்றன. தி.மு.க. திட்டமிட்டு இந்த அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. போராட்டத்தை தூண்டி விடுகிறது.

ஏற்கனவே தொ.மு.ச. மூலம் சம்பள உயர்வு வேண்டும் என்று தொழிலாளர்கள் பிரச்சனையை தூண்டி விட்டார்கள். இப்போது பஸ் கட்டணம் உயர்வு என்று கூறி போராட்டம் செய்கிறார்கள். தி.மு.க.வினருக்கு உண்மை நிலவரம் தெரியும்.

இந்த நெருக்கடியான சூழ்நிலையை பயன்படுத்தி பொதுமக்களையும், தொழிலாளர்களையும் தி.மு.க. தூண்டி விடுகிறது.

தி.மு.க. ஆட்சி காலத்தில் வைத்துச் சென்ற நிலுவைத் தொகை ரூ.926 கோடியை நாங்கள் தான் கொடுத்து இருக்கிறோம். சம்பளத்தை உயர்த்தி விட்டு கட்டணத்தை உயர்த்தாவிட்டால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரிக்குள் மத்திய அரசு கொண்டு வந்தால் அதை கடுமையாக எதிர்ப்போம்.

அ.தி.மு.க.வின் 6 மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவார்கள். இன்று உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை உறுப்பினர் புதுப்பிக்கப்பட வேண்டும். புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்ற விதி புரட்சித் தலைவரால் உருவாக்கப்பட்டது. அந்த அடிப்படையில் இன்றைக்கு புதிய படிவம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள். ஏற்கனவே 1 கோடியே 50 லட்சம் உறுப்பினர்களை கொண்ட மாபெரும் இயக்கம் அ.தி.மு.க.

அதற்கு மேலும் உறுப்பினர்களை சேர்வதற்கு இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். புதுப்பிப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறார்கள். இன்று கொண்டு வரப்பட்ட விண்ணப்ப படிவம் முழுமையாக தீர்ந்து விட்டது. அடுத்து நாளை முதல் புதிய விண்ணப்பம் வழங்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. மறுவரையறை பணிகள் நடந்து முடிந்திருக்கிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Tags:    

Similar News