ராகுல் காங். தலைவராக பதவி ஏற்பு: பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது- எச்.ராஜா பேட்டி
கடலூர்:
நாகை மாவட்டம் சீர்காழியில் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாரதிய ஜனதாவை சேர்ந்த அகோரம் என்பவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அகோரத்தை பார்ப்பதற்காக பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று கடலூர் வந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அகோரத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றார். இதனால் பாரதிய ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படபோவதில்லை. பாரதிய ஜனதாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது.
சீர்காழியில் நடைபெற்ற மோதலில் பா.ஜ.க.வினர் பழிவாங்கும் நோக்கில் கைது செய்யப்பட்டனர். திருமாவளவன் இந்து கோவில்களை பற்றி சர்ச்சையாக பேசியதாலேயே நான் அவரை கண்டித்து பேசினேன்.
தமிழ்நாட்டில் நிர்வாகம் சரியில்லை. திருவண்காடு போலீஸ் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.