செய்திகள்

டெல்லியில் அ.தி.மு.க. விற்கப்பட்டுவிட்டது: புகழேந்தி பேட்டி

Published On 2017-10-27 13:13 IST   |   Update On 2017-10-27 13:13:00 IST
எம்.ஜி.ஆர். தோற்றுவித்த ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க. தற்போது டெல்லியில் விற்கப்பட்டுவிட்டது என்று புகழேந்தி நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஈரோடு:

கர்நாடக மாநில அ.தி. மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை கமி‌ஷன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

ஜெயலலிதா மரணம் பற்றி அந்த கமி‌ஷன் விசாரித்தால் முதலில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் தான் விசாரிக்க வேண்டும். அது நடக்கப்போவதில்லை. எனவே ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.


எம்.ஜி.ஆர். தோற்றுவித்த ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க. தற்போது டெல்லியில் விற்கப்பட்டுவிட்டது. அதை மீட்கவே சசிகலாவும், தினகரனும் போராடுகிறார்கள்.

இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்து வருகிறது. எங்கள் அணி சார்பில் 7 லட்சம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி அணி சார்பில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரத்தில் பொதுச் செயலாளர் சசிகலா என்றும், துணை பொதுச் செயலாளர் தினகரன் என்றும் குறிப்பிட்டு கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர்.

தற்போது அதை அவர்கள் வாபஸ் பெற்று உள்ளனர். இப்படி அவர்கள் மாறி மாறி செய்வது என்ன நியாயம்? அமைச்சர் ஒருவர் பேசும்போது, மோடி இருக்கிறார். பார்த்துக் கொள்வார் என்று கூறி உள்ளார்.

இரட்டை இலை தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது ஒரு அமைச்சர் இவ்வாறு கூறுவது கண்டனத்துக்குரியது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வோம்.

எங்கள் அணிதான் உண்மையான அ.தி.மு.க. அணி. நாங்கள் பொதுக் குழுவை கூட்டி எங்கள் பலத்தை நிரூபிப்போம். அவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்தி சசிகலாவையும், தினகரனையும் நீக்கினர்.அது பொதுக்குழுவே அல்ல.

என்னை பார்ப்பவர்கள் அனைவரும் தமிழக அரசை எப்போது வீட்டுக்கு அனுப்புவீர்கள்? என்று கேட்கிறார்கள்.அந்த அளவுக்கு இந்த அரசு எதிர்ப்பை சம்பாதித்து உள்ளது.


இந்த அரசை ஆட்டவும் முடியாது. அசைக்கவும் முடியாது என்ற எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். ஒரு முதல்-அமைச்சர் இவ்வாறு பேசுவது நாகரீகமற்றது. இதற்கு கூடிய சீக்கிரம் பதில் கிடைக்கும்.

எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இது பற்றி மோடியிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறி புலம்பியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலோ, இடைத்தேர்தலோ, பொதுத் தேர்தலோ எதையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததுதான். இந்த அரசில் இதெல்லாம் சகஜம் தான்.

அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு தடுப்பு நடவடிக்கை என்று கூறி ஒவ்வொரு இடத்துக்கும் சுற்றுலா சென்று வருகிறார். அவர் விளக்கம்தான் அளிக்கிறார். டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. தனியார் நிறுவனம், ஆஸ்பத்திரிகளிடம் டெங்கு பெயரில் பணம் வசூலிக்கிறார்கள்.

திருமாவளவனை தமிழிசை அவதூறாக பேசி உள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் பாரதிய ஜனதாவை யார் எதிர்த்து பேசினாலும் வழக்கு போட்டு மிரட்டுகின்றனர்.

நாஞ்சில் சம்பத் மீது கூட 11 வழக்குகள் போடப்பட்டு உள்ளது. ஆனால் வட மாநிலங்களில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கா போடப்படுகிறது?

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

Similar News