செய்திகள்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உண்மையை ஒப்புக்கொண்டார்: திருமாவளவன் பேட்டி

Published On 2017-10-22 15:33 IST   |   Update On 2017-10-22 15:33:00 IST
தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பா.ஜனதாவின் தலையீடு உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் வகையில் ராஜேந்திர பாலாஜி பேசி இருப்பது அவரது ஒப்புதல் வாக்குமூலம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசின் நடவடிக்கை மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் பா.ஜனதாவின் தலையீடு உள்ளது என்பதை ஒப்புக் கொள்ளும் வகையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மனம் திறந்து உண்மையை பேசி இருக்கிறார். இது அவரது ஒப்புதல் வாக்குமூலம்.

பா.ஜனதா, தமிழக அரசின் நடவடிக்கையில் தலையிடுகிறது என்று ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதலில் சுட்டிக்காட்டியது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான்.

தமிழக அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அது சுதந்திரமாகவும், சுய மாகவும் இயங்க அனுமதிக்க வேண்டும். இதில் பா.ஜனதா கட்சி மற்றும் மத்திய அரசு தலையிடுவது என்பது நியாயம் இல்லை. ஜனநாயகமும் அல்ல.

மெர்சல் படம் குறித்து தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி உள்ளனர் என்பது எனது கருத்து. படத்தின் கருத்தால் மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

மெர்சல் படத்துக்கு கூடுதல் விளம்பரத்தை தேடி தரவும், நடிகர் விஜய்யை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற உள்நோக்கத்துக்காகவும் தான் இந்த சர்ச்சைகள் கூறப்பட்டு வருகிறது.

நியாயமாக தணிக்கைத் துறையை எதிர்த்துதான் பா.ஜனதாவினர் போராடி இருக்க வேண்டும். விமர்சித்து இருக்க வேண்டும். இதனை அவர்கள் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News