செய்திகள்

சி.பி.எஸ்.இ-க்கு இணையாக பாடத்திட்டத்தை மாற்றும் பணி நவம்பரில் முடியும்: அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2017-09-16 13:01 IST   |   Update On 2017-09-16 13:01:00 IST
சி.பி.எஸ்.இ-க்கு இணையாக பாடத்திட்டத்தை மாற்றும் பணி நவம்பர் மாத இறுதிக்குள் முடிவு பெறும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார்.

டி.என்.பாளையம்:

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஆய்வில் 10 சதவீதம் மாணவ-மாணவிகள் கற்றல் குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.

எதிர் வரும் காலங்களில் எந்த தேர்வானாலும் சந்திக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.

சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்திற்கு இணையாக தமிழர் பண்பாடு, கலாச்சாரம், தொன்மை மாறாமல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் முடிவு பெறும்.

மேலும் அனந்த கிருஷ்ணன் தலைமையிலான கல்விக் குழுவினர் 6 மாநிலங்களுக்கு சென்று பாடத்திட்டத்தை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது சிட்கோ முன்னாள் வாரியத் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் தம்பி சுப்ரமணியம், ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் அந்தியூர் எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News