செய்திகள்

குட்கா விவகாரத்தில் 21 தி.மு.க. உறுப்பினர்கள் விளக்கம் அளித்தவுடன் முடிவு செய்யப்படும்: பொள்ளாச்சி ஜெயராமன்

Published On 2017-08-31 11:22 IST   |   Update On 2017-08-31 11:22:00 IST
சட்டமன்றத்தில் குட்கா காட்டிய விவகாரத்தில் 21 தி.மு.க. உறுப்பினர்கள் விளக்கம் அளித்தவுடன் முடிவு எடுக்கப்படும் என்று உரிமை குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

சென்னை:

துணை சபாநாயகரும், சட்டசபை உரிமை குழு தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டி வருமாறு:-

மறைந்த முதல்வர் அம்மாவால் அமைக்கப்பட்ட இந்த நல்லாட்சியில் ஏழை-எளிய மக்கள் நலன் பாதுகாக்கப்படவும், வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதில் செயல்மிக்க முதல்வராக எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். இதில் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மனம் வருத்தப்பட்டு இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தனியாக செயல்பட்டார். இப்போது நாங்கள் ஒன்றாக சேர்ந்து அ.தி.மு.க. என்ற ஒரே கட்சியாக உள்ளோம். அதே போல் இப்போது பிரிந்து சென்ற எம்.எல்.ஏ.க்களும் இணைவார்கள்.

சட்டமன்றத்திற்கு ஒரு உறுப்பினரை கூட அனுப்ப முடியாமல் மக்கள் மன்றத்தில் காணாமல் போன சில கட்சிகள் கவர்னரை நேற்றைய தினம் சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கூறினார்கள். இது இந்த நூற்றாண்டின் நகைச்சுவையாக உள்ளது.

கவர்னர் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டால் இந்த கட்சிகளில் எத்தனை பேர் ஓட்டு போட தகுதி படைத்துஇருக்கிறார்கள். மேலும் நண்பர் திருமாவளவன் மீதமுள்ள 4 ஆண்டுகளுக்கு வருமானத்தை பார்ப்பதற்காக ஆட்சியை தொடர நினைக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அப்படியென்றால் இவர் கட்சி நடத்துவது அதற்காக தானா?

அதே போல ஜவாஹிருல்லா எங்களோடு சென்றமுறை அம்மாவின் தயவால் கூட்டணியில் வெற்றி பெற்று விட்டு திடீரென்று தி.மு.க.வுடன் கூட்டுசேர்ந்தார். அதனால்தான் அவரை மறைந்த முதல்வர் அம்மா சேர்த்துக்கொள்ளவில்லை.

பிரிந்து இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட 134 பேரும் ஒரு தாய் மக்கள்தான். அம்மா உருவாக்கிய ஆட்சியை யாரும் இழக்க விரும்ப மாட்டார்கள். அவரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகமாக செயல்படுவோம்.

இந்த ஆட்சிக்கும், கட்சிக்கும் யார் துரோகம் செய்தாலும் அவர்கள் முக விலாசம் இல்லாமல் போய் விடுவார்கள். விலையில்லா லேப்டாப், ஆடுகள், கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18 ஆயிரம், காப்பீட்டு திட்டம், அம்மா உணவகம் இது போன்ற பல்வேறு திட்டங்கள் இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக தொடர்ந்து செயல்படுத்தப்படும்.


குட்கா விவகாரத்தை பொறுத்தவரை விசாரணை நடந்து வருகிறது. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் 5-ந் தேதிக்குள் பதில் அளக்க இ-மெயில் மூலமாகவும், கடிதம் மூலமாகவும் மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குரிய விளக்கம் வந்த பிறகு முடிவு எடுக்கப்படும்.

துரைமுருகன், நேரு, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன் போன்ற மூத்த தி.மு.க. உறுப்பினர்கள் குட்காவை கையில் எடுக்கவில்லை. இது குற்ற நடவடிக்கை என்பதை தெரிந்து கொண்டு அவர்கள் குட்காவை ஒதுக்கி விட்டனர்.

துரைமுருகன் மேஜையில், குட்கா விழுந்த போது கூட அவர் அதை கையில் எடுத்து பிரச்சினை செய்யவில்லை.

அவை உரிமைகுழுவின் அடுத்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் பங்கேற்க முடியாது. இதில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் குற்றச்சாட்டுக்கு ஆளானால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்

Similar News