செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் நடிகர் கருணாஸ் சந்திப்பு

Published On 2017-05-23 10:20 IST   |   Update On 2017-05-23 11:47:00 IST
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார்.
சென்னை:

அ.தி.மு.க. கூட்டணி கட்சியான முக்குலத்தோர் புலிப்படையின் தலைவராக இருப்பவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. இவர் அ.தி.மு.க. அம்மா அணிக்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டு வருகிறார்.

கடந்த சனிக்கிழமை நடிகர் கருணாஸ் பெங்களூர் சென்று பரப்பன அக்ரகார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்தார். பின்னர் கருணாஸ் கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சியும், கட்சியும் பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், விரைவில் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காலை நடிகர் கருணாஸ் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார்.


இது தொடர்பாக கருணாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரை தொகுதி பிரச்சனை குறித்து பேசினேன். சட்டமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி போதாததால் அதை அதிகப்படுத்தி தருமாறும், குடிநீர் பிரச்சனைக்கு தனி கவனம் செலுத்தி நிதி ஒதுக்க வலியுறுத்தியும் பேசினேன்.

பெங்களூர் சென்று நான் ஏற்கனவே சசிகலாவை சந்தித்தது தோழமை கட்சியின் வேட்பாளர் என்ற முறையில் தான். மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்திருந்தேன். அந்த சந்திப்புக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை.

எனக்கு புரட்சித்தலைவி அம்மா அங்கீகாரம் வழங்கியதற்கு சின்னம்மாவும் (சசிகலா) ஒரு காரணம். அந்த அடிப்படையில்தான் அவரை சென்று பார்த்து விசாரித்துவிட்டு வந்தேன்.

தற்போது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு திறமையாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்கள்.

இதைத்தொடர்ந்து நடிகர் கருணாஸ் சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News