செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சர் ஜெயக்குமார் மரியாதை

Published On 2017-03-16 10:38 IST   |   Update On 2017-03-16 10:38:00 IST
சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதையொட்டி முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
சென்னை:

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று 2017-18ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை பட்ஜெட்டுடன், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார். அங்கு ஜெயலலிதா நினைவிடத்தில் பட்ஜெட்டை வைத்து வணங்கினார்.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் தனது இல்லத்தில் இருந்து நேராக ஜெயலலிதா சமாதிக்கு வந்து மலர் தூவி மரியாதை செலுத்திவிட்டு சட்டசபைக்கு புறப்பட்டு சென்றார்.

பட்ஜெட் தாக்கலையொட்டி சட்டசபை வளாகம் மட்டுமின்றி, சட்டசபைக்கு வெளியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கும் இது முதல் பட்ஜெட் என்பதால், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News